போர் கப்பல்களில் அதிகரிக்கும் சுதேசி தொழில்நுட்பங்கள், 3ஆவது விமானந்தாங்கி கப்பலை கோரும் கடற்படை !!

  • Tamil Defense
  • May 15, 2023
  • Comments Off on போர் கப்பல்களில் அதிகரிக்கும் சுதேசி தொழில்நுட்பங்கள், 3ஆவது விமானந்தாங்கி கப்பலை கோரும் கடற்படை !!

சமீபத்தில் தலைநகர் தில்லியில் நடைபெற்ற கருத்தருரங்கு ஒன்றில் கூட்டுபடை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், தரைப்படை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் மற்றும் விமானப்படை தளபதி ஏர் சீஃப் மாரஷல் சவுதிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைவது பற்றியும் குறிப்பாக சுதேசி தொழில்நுட்பங்களை அதிகரிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது அப்போது கடற்படை தளபதி சில முக்கிய விஷயங்களை எடுத்து கூறினார்.

அதாவது இந்திய கடற்படையின் போர் கப்பல்களில் சுதேசி தொழில்நுட்பங்கள் அதிகரித்து வருவதாகவும் ஒரு போர் கப்பலுக்கு மிதப்பது நகர்வது மற்றும் சண்டையிடுவது என மூன்று அம்சங்கள் உள்ளது அதில் முதல் இரண்டிலும் கணிசமான அளவில் சுதேசி மயமாக்கல் எட்டபட்டு உள்ளதாக கூறினார்.

மிதக்கும் அம்சத்தை பொறுத்தவரை தற்போது 95% சுதேசி மயமாக்கல் நடைபெற்றுள்ளது எனவும் தற்போது DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் MIDHANI மிதானி, SAIL ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் DMR 249A, DMR 249B ஆகிய அதிநவீன இரும்பு வகைகள் போர் கப்பல் தயாரிப்பில் பயன்படுத்தி வரப்படுகிறது.

அடுத்ததாக நகரும் அம்சத்தை பொறுத்தவரை சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த 55% எனும் அளவில் இருந்து 65% என்ற அளவிற்கு சுதேசி மயமாக்கல் அதிகரித்துள்ளது, தற்போது என்ஜின் மற்றும் சில அமைப்புகள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும் மற்றபடி இயக்குவதற்கான கட்டுபாட்டு அமைப்பு, Shaft போன்றவை இங்கேயே தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

கடைசியாக சண்டையிடும் அம்சத்தை பொறுத்தவரை 35% இருந்து 55% ஆக சுதேசி மயமாக்கல் அதிகரித்து உள்ளதாகவும், இதை சார்ந்த பல்வேறு சென்சார்கள், பிரம்மாஸ் ஏவுகணைகள், LR – SAM ஏவுகணைகள், கடற்படை பிரங்கிகள், நீரடிகணை லாஞ்சர்கள் ஆகியவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் இந்த திறன்களை வைத்து கொண்டு இந்தியாவின் இரண்டாவது சுதேசி மற்றும் இந்திய கடற்படைக்கான மூன்றாவது விமானந்தாங்கி கப்பலை கட்டுவதற்கான பணிகளை துவங்க வேண்டும் என கோரிக்கை வைத்த அவர்

இந்த மூன்றாவது விமானந்தாங்கி கப்பலானது நேரடியாக சீன கடற்படையுடன் மோதுவதற்கு அல்ல மாறாக உலகின் பெரும்பகுதி வர்த்தகம் கடந்து செல்லும் இந்திய பெருங்கடல் பகுதியை கண்காணிக்க மற்றும் பாதுகாக்க வேண்டிய நோக்கதிற்கானது என கூறினார்.

அதே நேரத்தில் இந்திய விமானப்படையின் இந்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பிரம்மாஸ் ஏவுகணைகளை சுமக்கும் Su30 MKI விமானங்களை கொண்டு தஞ்சை விமானப்படை தளம் போன்றவை மூலமாக அளிக்க முடியும் கருத்தை எதிர்த்து அதனை விமானப்படை தொடர்ச்சியாக செய்வது சாத்தியமில்ல என விளக்கினார்.

மேலும் சிலர் கூறுவது போல அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் விமானந்தாங்கி கப்பலுக்கு பதிலாக போதும் என்பது சரியல்ல காரணம் விமானந்தாங்கி கப்பல்களால் பல்வேறு வகையான திறன்களை அளிக்க முடியும் மேலும் விமானந்தாங்கி கப்பல் படையணிகள் சுற்றியுள்ள 600 கிலோமீட்டர் தொலைவிலான பகுதியை கண்காணித்து பாதுகாக்கவும் ஒரு நாள் 500 கிலோமீட்டர் பயணிக்கும் ஆற்றல் கொண்டவை எனவும் எடுத்துரைத்தார்.

கூட்டுபடை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் கூறும்போது தன்னிறைவு இந்தியாவை உலக அரங்கில் முன்னனியில் நிறுத்த உதவும் , இந்தியா முழுவதும் புதிதாக உருவாகிய 84,000 நிறுவனங்கள் சுமார் 96000 தளவாடங்களை இந்தியாவிலே உருவாக்கி வருவதாகவும் கூறினார்.

DRDO தலைவர் முனைவர் சமீர் காமத் அமெரிக்கா போன்ற நாடுகள் பாதுகாப்பு பட்ஜெட்டில் 15% வரை ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கு செலவிடும் நிலையில் நாம் 5.5% தான் செலவிடுகிறோம் இதூ போதாது இதை வைத்து தன்னிறை அடைவது மிகப்பெரிய சவால்,

எனினும் DRDO சுதேசி மயமாக்கலை அதிகரிக்க தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், 15 சிறப்பு மையங்களை உருவாக்கி உள்ளதாகவும், 35 வயதுக்கு கீழ் உள்ள இளம் திறமையாளர்களை கண்டறிய 5 இளம் விஞ்ஞானி மையங்களை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.