சூடானில் சேதமடைந்த வெளிச்சமற்ற ஒடுதளத்தில் கடும் சண்டைக்கு இடையே தரையிறங்கி மக்களை மீட்ட இந்திய விமானப்படை !!

  • Tamil Defense
  • May 1, 2023
  • Comments Off on சூடானில் சேதமடைந்த வெளிச்சமற்ற ஒடுதளத்தில் கடும் சண்டைக்கு இடையே தரையிறங்கி மக்களை மீட்ட இந்திய விமானப்படை !!

சூடான் நாட்டில் உள்நாட்டு போர் மூண்டுள்ள நிலையில் இந்தியா இந்திய குடிமக்களை மீட்க ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் முப்படைகளையும் களமிறக்கி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது இதுவரை 2000 க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 27-28 ஆகிய நாட்களுக்கு இடைபட்ட இரவில் சூடான் தலைநகர் கார்ட்டூம் நகரின் வடக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வாடி சய்யித்னா விமான நிலையத்தில் இந்திய விமானப்படை மேற்கொண்ட மீட்பு நடவடிக்கை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது இந்த வாடி சய்யித்னா விமான நிலையத்தின் ஒடுபாதை சீரமைப்பு இன்றி சேதமடைந்த நிலையில் உள்ளது, மேலும் இங்கு தரையிறங்க மேலேழும்ப தேவையான விளக்குகள் எதுவும் இல்லை எரிபொருள் வசதிகளும் இல்லை, அப்படியான மோசமான விமான நிலையமாகும்.

இந்த விமான நிலையத்தில் சில நாட்களுக்கு முன்னர் துருக்கி விமானப்படையின் விமானம் ஒன்று மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சூடான் துணை ராணுவப்படையான RSF நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக அதன் எரிபொருள் அமைப்பு சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூடானுக்கான இந்திய ராணுவ பிரதிநிதி தலைமையிலான கான்வாய் மூலமாக 121 இந்தியர்கள் வாடி சய்யித்னா விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர், இவர்களில் பலர் நோய்வாய்ப்பட்டவர்களாவர் கூடவே கர்ப்பிணி பெண் ஒருவரும் இருந்தார்.

இந்திய விமானப்படையின் சிறப்பு நடவடிக்கை விமானமான C-130J SUPER HERCULES ரக விமானம் இந்த விமான தளத்தில் கடுமையான இருட்டில் இரவு நேர் பார்வை கருவிகள் மற்றும் அகச்சிவப்பு கதிர் சென்சார்கள் உதவியுடன் வெற்றிகரமாக தரையிறங்கியது.

உடனடியாக விமானத்தில் இருந்த கருட் கமாண்டோ சிறப்பு படையினர் மக்களை விமானத்தில் ஏற்றி அவர்களின் உடமைகளையும் விமானத்தில் ஏற்றினர் பின்னர் விமானம் அங்கிருந்து புறப்பட்டது இதற்கு இரண்டரை மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை மேற்குறிப்பிட்ட விமானத்தின் தலைமை விமானியான க்ரூப் கேப்டன் ரவி நந்தா தலைமையில் நடைபெற்றது, ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்கு வாயு சேனா விருதை இவர் பெற்றது கூடுதல் சிறப்பான தகவல் ஆகும்.

மேற்குறிப்பிட்ட விமானம் இத்தகைய ஒடுபாதையே இல்லாத நிலபரப்பில் கூட இறங்க வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் அப்படி தரை இறக்கி திரும்ப மேலேம்புவது சாதாரணமானது அல்ல விமானிகளின் சிறப்பான திறமை இன்றி சாத்தியமில்லை என்றால் மிகையாகாது.