நேபாள கோர்க்கா வீரர்களை படையில் இணைக்க திட்டமிடும் சீனா ??

  • Tamil Defense
  • May 9, 2023
  • Comments Off on நேபாள கோர்க்கா வீரர்களை படையில் இணைக்க திட்டமிடும் சீனா ??

சீன ராணுவம் உயர்ந்த பகுதிகள் மற்றும் மலை பகுதிகளில் தனது வீரர்களை களமிறக்கி செயல்படுவதில் சிக்கலை சந்தித்து வரும் நிலையில் நேபாள நாட்டு கோர்க்கா வீரர்களை தனது ராணுவத்தில் சேர்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவம் அக்னிவீரர் திட்டத்தை செயலாற்றிய போது நேபாள அரசு தங்களது நாட்டு கோர்க்கா வீரர்தளுக்கு மட்டும் விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்த நிலையில் இந்திய அரசு அதனை நிராகரித்து மறுப்பு தெரிவித்துள்ளது,

இந்திய தரைப்படையில் உள்ள கோர்க்கா வீரர்களில் நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே நேபாளத்தை சேர்ந்தவர்கள் ஆவர், மீதமுள்ளோர் இந்திய கோர்க்கா வீரர்கள் ஆவர்.

இவர்கள் நேபாளத்திற்கு அனுப்பும் பணம் 620 மில்லியன் டாலர்கள் ஆகும் இது நேபாள ராணுவ பட்ஜெட்டை விடவும் 200 மில்லியன் டாலர்கள் அதிகமாகும், மேலும் நேபாள ராணுவத்தில் கிடைப்பதை விடவும் 2.5 மடங்கு அதிக சம்பளம் கிடைக்கிறது ஒய்வூதியமும் கிடைக்கிறது, இது நேபாள அரசுக்கு மிகப்பெரிய அன்னிய செலவானி வருவாயாக உள்ளது.

இந்த நிலையில் அக்னிவீரர் திட்டத்தால் இவை அனைத்தும் பாதிக்கப்படும் நிலை உள்ளது, மேலும் 1947ஆம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து நேபாளம் செய்து கொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு எதிரானது என நேபாள அரசு கூறி இந்தியா நேபாள வீரர்களை அக்னிவீரர் திட்டத்தின் கீழ் படையில் இணைக்க தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் நேபாள அரசு சீன அரசுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில் சீனா நேபாள கோர்க்கா வீரர்களை நல்ல ஊதியம் கொடுத்து படையில் இணைத்தால் நேபாள அரசுக்கு அன்னிய செலவாணி வருவாய் கிடைக்கும் அதே நேரத்தில் சீன ராணுவத்திற்கு மலை பகுதிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது கவலை அளிக்கும் விஷயம் என்றால் மிகையல்ல.