கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரஷ்யாவின் அதிமுக்கிய ரகசிய தகவல்கள் !!
ரஷ்யாவை சேர்ந்த மர்ம நபர் உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர் அநியாயமானது என கருதி அதனால் ஏற்பட்ட கோபத்தில் ரஷ்யாவின் முக்கிய சைபர் போர் பற்றிய தகவல்களை கசிய விட்டுள்ளார் இந்த தகவல்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் வடகிழக்கு பகுதியில் ஒரு ஆறுநிலை கட்டிடத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் தான் இந்த நிகழ்வின் மையப்புள்ளி ஆகும், இந்த நிறுவனத்தின் பெயர் NTC Vulkan இவர்கள் ரஷ்ய பாதுகாப்பு துறைக்கான சைபர் பாதுகாப்பு ஆலோசனை வழங்கி வருவதாகவும்
அது தவிர ரஷ்ய ரயில்வே , ரஷ்யாவின் பிரதான விமான நிறுவனமான Aeroflot, ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான Sberbank ஆகியோருக்கு தங்களது சேவைகளை அளித்து வருவதாகவும், அந்த நிறுவனத்தில் உள்ள பணி கலாச்சாரம் மற்றெந்த ஐடி நிறுவனத்தை போல இருப்பதாகவும் தான் வெளி உலகிற்கு தெரியும்.
ஆனால் இந்த நிறுவனத்தை உருவாக்கியோர் ஆண்டன் மாக்ரோவ் மற்றும் அலெக்சாண்டர் இர்சாவ்ஸ்கி எனும் முன்னாள் ரஷ்ய தரைப்படை அதிகாரிகள் ஆவர், இவர்களுக்கு ரஷ்ய பாதுகாப்பு துறையில் நல்ல பழக்கம் உண்டு.இவர்களது நிறுவனமும் ரஷ்ய பாதுகாப்பு தொழில்துறையின் தவிர்க்க முடியாத அங்கமாகும்.
2011ஆம் ஆண்டு ரஷ்யா தனது சைபர் போர் திறன்களை அதிகரித்த காலகட்டத்தின் போது ரஷ்ய உள்நாட்டு உளவு அமைப்பான FSB தான் இந்த பணிகளை கவனித்து வந்தது. இந்த நிலையில் 2012ஆம் ஆண்டு தற்போதைய ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரான செர்கேய் ஷோய்கு நியமனம் செய்யப்படுகிறார். அப்போது தனக்கு நேரடியாக பதில் சொல்லும் சைபர் போர் வீரர்களை உருவாக்க விரும்பினார்.
அப்போது தான் வல்கண் நிறுவனத்திற்கு அதிகளவில் வாய்ப்புகள் கிடைக்கிறது. மேற்குறிப்பிட்ட முகமூடியை வெளி உலகிற்கு காட்டிவிட்டு 120 பணியாளர்களுடன் இந்த நிறுவனம் தனது சைபர் போர் பணிகளை பல நாடுகளில் நடத்தியுள்ளது, இதன் பெரும்பாலான பணியாளர்கள் மாஸ்கோ பல்கலைக்கழக மாணவர்கள் ஆவர், பணியாளர்கள் அனைவருக்கும் வழக்கத்திற்கு மாறாக நல்ல ஊதியமும் வழங்கப்படுகிறது.
இந்த வல்கண் நிறுவனம் ரஷ்யாவின் உள்நாட்டு உளவு அமைப்பான FSB, வெளிநாட்டு உளவு அமைப்பான SRV, ரஷ்ய ராணுவத்தின் உளவு அமைப்புகளான GOU மற்றும் GRU ஆகியவற்றிற்கு தனது சேவைகளை தற்போது வழங்கி வருகிறது.
வல்கண் நிறுவனமும் பிரபல ரஷ்ய ஹேக்கிங் குழுவான Sandworm ஆகியவை இணைந்து செயல்படுவது தெரிய வந்துள்ளது, Sandworm குழு இரண்டு முறை உக்ரைனில் மின்சார தடைகளை ஏற்படுத்தி உள்ளது, தென்கொரிய ஒலிம்பிக் போட்டிகளில் குளறுபடி ஏற்படுத்தி உள்ளது, மேலும் Scan – V எனும் பெயரில் கீழ்வரும் தாக்குல்களை நடத்தி உள்ளது.
முதலில் NotPetya “நாட்பெட்யா” எனும் பெயர் கொண்ட உலக வரலாற்றில் அதிக பொருளாதார ஏற்படுத்திய வைரஸை ஏவி உள்ளது. இந்த வைரஸ் இணையம் முழுக்க பரவி பல்வேறு குறைபாடுகளை கண்டறிந்து எதிர்கால தாக்குதல்களுக்காக அந்த குறைகளை சேகரித்து வைத்து கொள்ளும்
பின்னர் Amezit “அமெஸிட்” எனப்படும் வைரஸ் மூலமாக ரஷ்ய பகுதிக்குள்ளான இணையத்தை கட்டுபடுத்தி கண்காணித்து பல போலி சமுக வலைதள கணக்குகள் மூலமாக போலி தகவல்களை பரப்பி வருகிறது.
மூன்றாவதாக வல்கண் உருவாக்கிய Crystal – 2V “க்ரிஸ்டல் – 2வி” எனப்படும் அமைப்பு மூலமாக கடல் வான் மற்றும் ரயில் உள்கட்டமைப்புகளை சைபர் தாக்குதல் மூலமாக முடக்குவதற்கான பயிற்சிகளை ரஷ்ய சைபர் படைகளுக்கு பயிற்றுவித்து வருகிறது.
கசிந்த தகவல்கள் 2016 – 2021 காலகட்டத்தை சேர்ந்தவை ஆகும், இவற்றில் அமெரிக்காவில் தேர்வு செய்யப்பட்ட பல இலக்குகள், ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஒரு அணுமின் நிலையம் ஆகியவை பற்றிய தகவல்கள் உள்ளது, மற்றொரு ஆவணம் அமெரிக்காவில் திருடப்பட்ட சைபர் போர் வைரஸ் போன்ற அமைப்புகளை ரஷ்யா பயன்படுத்தி கொள்ள வலியுறுத்துகிறது.
நிபுணர்கள் இந்த நிறுவனம் உக்ரைன் போர் துவங்கிய பிறகு அங்கு களமாடி உள்ளதா என்ற தகவல் இவற்றில் இல்லை ஆனால் ரஷ்யா தான் எதிரிகளாக கருதும் நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், கனடா , ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கைவரிசை காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது என்கின்றனர்.
இந்த தகவல்களை கசிய விட்ட நபர் Süddeutsche Zeitung என்ற ஜெர்மானிய நாளிதழை அணுகி உள்ளார், இதன் பிறகு ஜெர்மனியின் மூயூனிக் நகரத்தில் இயங்கி வரும் Paper Trail Media என்கிற நிறுவனத்துடன் சில தகவல்களை பகிர்ந்தார். அந்த நிறுவனம் ஜெர்மானிய வாராந்திர நாளிதழான டெர் ஸ்பீகலுடன் இணைந்து உருவாக்கிய அமைப்பில் பணியாற்றிய Guardian, Washington Post மற்றும் Le Monde போன்ற 11 பிரபல ஊடகங்களை சேர்ந்த ஊடகவியலாளர்களை கொண்டு இவற்றின் உண்மைத்தன்மையை கண்டறிய முயன்றது.
இந்த நிலையில் ஐந்து மேற்கத்திய உளவு அமைப்புகள் இந்த தகவல்கள் உண்மை தான் என்பதை உறுதி செய்துள்ளன, இது பற்றி வல்கண் நிறுவனம் மற்றும் ரஷ்ய அதிபர் மாளிகையை பல செய்தி நிறுவனங்கள் பல முறை தொடர்பு கொண்ட போதிலும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.