பிராந்திய தரைப்படை படையணியின் கலைப்பை எதிர்த்து வழக்கு !!
பிராந்திய தரைப்படையின் 1101ஆவது ரெயில்வே பொறியாளர் படையணி சண்டிகரை தளமாக கொண்டு இயங்கி வருகிறது, தற்போது இந்த படையணியை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதை எதிர்த்து அந்த படையணியின் கட்டளை அதிகாரி மேலும் பல அதிகாரிகள் முதல் கடைநிலை வீரர் என 70 பேர் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர், இந்த படையணியின் வீரர்கள் அனைவரும் ரயில்வே ஊழியர்கள் ஆவர்.
பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் இத்தகைய ஆறு படையணிகள் உள்ளன ஆனால் இவற்றிற்கான செலவை ரயில்வே தான் ஏற்று கொண்டு உள்ளது, அவற்றில் 5 படையணிகளை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் 1101ஆவது படையணி – சண்டிகர், 1031ஆவது படையணி – கோட்டா ராஜஸ்தான், 1105ஆவது படையணி – ஹைதராபாத், 970ஆவது படையணி – ஜான்ஸி உத்தர பிரதேசம் மற்றும் 1032ஆவது படையணி – ஆத்ரா மேற்கு வங்கம் ஆகிய படையணிகள் கலைக்கப்பட உள்ளன.
அதே நேரத்தில் பிஹார் மாநிலம் ஜமால்பூர் நகரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 969ஆவது ரயில்வே பொறியாளர் படையணியும் கலைக்கப்பட இருந்த நிலையில் சீன எல்லையை ஒட்டியுள்ள சிலிகுரி காரிடார் வழியாக செல்லும் 361 கிலோமீட்டர் ரயில் பாதையை பராமரித்து எப்போதும் செயல்பாட்டில் வைத்திருக்கும் பொருட்டு அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட 1101ஆவது ரயில்வே படையணியானது பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் உள்ள முக்கிய ரயில் பாதையை பராமரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளது ஆகவே இதை கலைப்பது பாதுகாப்பு படைகளுக்கு பெருத்த பின்னடைவு என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே பொறியாளர் படையணிகள் போர் காலங்களிலும் சரி, உள்நாட்டு பிரச்சினைகள், இயற்கை பேரிடர்களின் போதும் சரி ரயில் பாதைகளை எப்போதும் சீராக வைத்திருக்கும் முக்கியமான பணியை மேற்கொண்டு வருகின்றன, ஆகவே எப்போது தேவைப்பட்டாலும் ரயில் பாதைகளை பயன்படுத்தி படைகளை நகர்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.