நேட்டோவில் இணைந்த ஃபின்லாந்து, இரட்டிப்பான ரஷ்யாவுடனான நேட்டோவின் எல்லை !!

  • Tamil Defense
  • April 6, 2023
  • Comments Off on நேட்டோவில் இணைந்த ஃபின்லாந்து, இரட்டிப்பான ரஷ்யாவுடனான நேட்டோவின் எல்லை !!

செவ்வாய்க்கிழமை அன்று ஃபின்லாந்து அதிகாரப்பூர்வமாக NATO – North Atlantic Treaty Organisation எனப்படும் உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பின் 31ஆவது உறுப்பு நாடாக இணைந்தது.

இதன் மூலம் ஐரோப்பாவில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது அதாவது ஃபின்லாந்து நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு முன்னர் வரை ரஷ்யா உடன் ஐந்து நேட்டோ நாடுகள் 1215 கிலோமீட்டர் நீளம் கொண்ட எல்லையை கொண்டிருந்தன ஆனால் தற்போது ரஷ்யா உடனான நேட்டோவின் எல்லை இருமடங்கு ஆகியுள்ளது இதற்கு காரணம் ரஷ்யாவுடன் 1300 கிலோமீட்டர் நீள எல்லையை ஃபின்லாந்து கொண்டுள்ளதாகும்.

செவ்வாய் அன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆந்தணி ப்ளிங்கென்னிடம் ஃபின்லாந்து வெளியுறவு அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ இணைவதற்கான ஆவணங்களை நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் முன்னிலையில் வழங்கினார்.

அதனை தொடர்ந்து நேட்டோ தலைமையகத்தின் முற்றத்தில் நடைபெற்ற விழாவில் நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் ஃபின்லாந்தை கூட்டமைப்பிற்கு வரவேற்று பேசினார் தொடர்ந்து மற்ற 30 நேட்டோ நாடுகளின் கொடிகள் வரிசையில் ஃபின்லாந்து தேசிய கொடியும் ஏற்றப்பட்டது.

ஃபின்லாந்து அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அணி சேரா கொள்கையை களைந்து விட்டு மற்றொரு புதிய காலகட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபின்லாந்து நேட்டோவில் இணைய வேண்டும் என்ற கோரிக்கை உக்ரைன் போருக்கு முன்னர் வரை மிகவும் சிறிய அளவில் இருந்தது ஆனால் உக்ரைன் போருக்கு பிறகு 80% அதிகமான ஃபின்லாந்து மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.