அந்தமான் முப்படை கட்டளையகத்தை நவீனமயமாக்க திட்டம் !!

சீனா இந்தியாவை சுற்றி இலங்கையின் ஹம்பாந்தோட்டை, பாகிஸ்தானுடைய க்வதர், ஈரானுடைய சாபஹார், ஐக்கிய அரபு அமீரகத்தின் காலிஃபா, துறைமுகங்களில் முதலீடு செய்துள்ளது, இது தவிர கிழக்கு ஆஃப்ரிக்க நாடான ஜிபூட்டி, கிழக்காசியாவின் மியான்மரின் கோகோ தீவுகள் மற்றும் கம்போடியாவின் ரியாம் தேசிய பூங்கா ஆகிய பகுதிகளில் ராணுவ தளங்களை ஏற்படுத்தி உள்ளது.

இவற்றில் கம்போடியாவின் சிஹானூக்வில் கடற்படை தளத்திற்கு அருகேயுள்ள ரியாம் தேசிய பூங்காவில் அமைய உள்ள சீன ராணுவ தளத்தை தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளுக்கும் கடல்மார்க்கமாக சீனாவில் இருந்து வரும் போது அந்தமானை கடந்து செல்ல வேண்டும், கம்போடியாவில் வர உள்ள சீன ராணுவ தளம் கூட 1202 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது.

அதே நேரத்தில் மியான்மரின் கோகோ தீவுகள் அந்தமானில் இருந்து வடக்கே வெறுமனே 60 கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளன, இங்குள்ள சீன தளம் இந்தியாவின் கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் அந்தமானில் இந்திய ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க சீனாவுக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.

தற்போது அந்தமான் முப்படை கட்டளையகத்தின் திறன்கள் என்ன என்பது பற்றிய தகவல்கள் பொது வெளியில் பெரிதாக இல்லை ஆனால் அதிகரித்து வரும் சீனாவின் செயல்பாடுகள் காரணமாக அந்தமானில் நவீனமயமாக்கல் பணிகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.