இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட வழக்கில் தண்டனை அறிவிப்பு !!

  • Tamil Defense
  • April 13, 2023
  • Comments Off on இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட வழக்கில் தண்டனை அறிவிப்பு !!

2019ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவுக்குள் அத்துமீறிய தினமன்று இந்திய விமானப்படையின் Mi-17 ரக ஹெலிகாப்டர் இந்திய படைகளாலேயே சுட்டு வீழ்த்தப்பட்டது.

மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் ஆறு விமானப்படையினர் மற்றும் ஒரு சிவிலியன் இறந்தனர், இதை தொடர்ந்து ராணுவ நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டு இரண்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி க்ருப் கேப்டன் சுமன் ராய் சவுதிரி அன்று ஹெலிகாப்டர் புறப்பட்ட தளத்தின் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருந்தார், அவர் தான் ஹெலிகாப்டரின் IFF Identification of Friend or Foe எனப்படும் நண்பனா எதிரியா என கண்டறியும் கருவி செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்திருக்க வேண்டும்

ஹெலிகாப்டரில் மேற்குறிப்பிட்ட அமைப்பு அணைத்து வைக்கப்பட்ட நிலையில் தளத்தில் இருந்து புறப்பட்டது, பறக்க துவங்கிய 10 நிமிடத்தில் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்த இஸ்ரேலிய ஸ்பைடர் SPYDER வான் பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது இதற்கான உத்தரவை பிறப்பித்தவரும் இவரேயாகும்.

க்ரூப் கேப்டன் சவுதிரி மீது வைக்கப்பட்ட 9 குற்றச்சாட்டுகளில் ஐந்தில் குற்றம் உறுதியாகி உள்ளது, குறிப்பாக விமானப்படையின் தலையாய உத்தரவுகளில் ஒன்றான 3200 வடக்கு அட்சரேகைக்கு மேல் பறக்கும் அனைத்து விமானப்படை வானூர்திகளிலும் IFF செயல்பாட்டில் இருக்கவேண்டும் என்பதாகும்.

அந்த IFF கருவி மட்டும் அணைத்து வைக்கபடாமல் இருந்திருந்தால் க்ரூப் கேப்டன் சுமன் ராய் சவுதிரிக்கு அந்த ஹெலிகாப்டர் நம்முடையது என்பதை உறுதி செய்து இருக்கவும் அதன் மீதான தாக்குதலை நடத்த உத்தரவு பிறப்பிக்காமல் இருந்திருக்க முடியும்.

தற்போது இவரை கோர்ட் மார்ஷியல் முறையின்படி கவுரவம் இல்லாத முறையில் பணி நீக்கம் செய்ய ராணுவ நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து மேற்குறிப்பிட்ட அதிகாரி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அங்கு தண்டனையை எதிராக நிலுவை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மற்றொரு அதிகாரியான விங் கமாண்டர் ஷியாம் நைத்தானி மீது வைக்கப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளில் நான்கில் நிரபராதி எனவும் ஒன்றில் பணிமுறை கண்டனமும் கிடைத்துள்ளது மேலும் இவரது பதவி உயர்வு நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது, இவர் அப்போது தளத்தின் தலைமை விமான கட்டுபாட்டு அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.