பெகாசஸ் உளவு மென்பொருள் போன்ற நவீன உளவு மென்பொருள் வாங்க இந்தியா திட்டம் !!

  • Tamil Defense
  • April 5, 2023
  • Comments Off on பெகாசஸ் உளவு மென்பொருள் போன்ற நவீன உளவு மென்பொருள் வாங்க இந்தியா திட்டம் !!

மத்திய அரசு இஸ்ரேலின் NSO Group எனும் குழுமம் உருவாக்கிய Pegasus Spyware அதாவது பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள், சமுக செயற்பாட்டாளர்கள் போன்றோரை வேவு பார்த்ததாக பிரச்சினை நடைபெற்றது நமக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் தற்போது இந்தியா சுமார் 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் பெகாசஸை போன்ற அதிநவீன உளவு மென்பொருளை வாங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதாவது இந்த முறை மிக மிக ரகசியமாக இயங்கும் மென்பொருளை வாங்குவதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது, அந்த வகையில் தற்போது சில நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலை சேர்ந்த Cognyte காக்நைட், Quadream க்வாட்ரீம் போன்ற நிறுவனங்கள் மற்றும் க்ரீஸ் நாட்டை சேர்ந்த Intellexa இன்டெலெக்ஸா ஆகிய நிறுவனங்களின் உளவு மென்பொருள்களை வாங்குவது பற்றி பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும்

இதில் Intellexa நிறுவனத்தின் Predator உளவு மென்பொருள் ஏற்கனவே எகிப்து, சவுதி அரேபியா, மடகாஸ்கர், ஒமன் ஆகிய நாடுகளில் பயன்படுத்தி வரப்படுவதாகவும் இந்தியா இதற்கான அறிவிப்பை வெளியிட்டதும் ஆஸ்திரேலியா, இத்தாலி, ஃபிரான்ஸ் உள்ளிட்ட பல உலக நாடுகளின் நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி மேற்கண்ட QUADREAM, Cognyte, Intellexa நிறுவனங்கள் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றை தொடர்பு கொண்ட போது பதில் அளிக்கவில்லை என Financial Times நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகள் தங்களது உளவு நிறுவனங்கள் உருவாக்கிய மென்பொருள்களை பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியா போன்ற பல நாடுகள் இத்தகைய மென்பொருள்களை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது,

இந்த உளவு மென்பொருட்கள் இலக்கின் மொபைல், கணிணி ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டால் அதன் பிறகு அனைத்து அழைப்புகள், சமுக வலைதள மெசெஜூகள், SMS என ஒன்று விடாமல் தகவல்களை திரட்டி தருவதன் மூலமாக உளவு நிறுவனங்கள் கண்காணிக்கின்றன என்பது கூடுதல் தகவல் ஆகும்.