1700 கோடி ரூபாய் மதிப்புள்ள தாக்குதல் கட்டுபாட்டு ரேடார்களை வாங்க ஒப்பந்தம் !!
இந்திய கடற்படைக்காக பதிமூன்று Lynx – U2 FCR Fire Control Radar அதாவது தாக்குதல் கட்டுபாட்டு ரேடார்களை வாங்க பெங்களூர் நகரில் இயங்கி வரும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் BEL நிறுவனத்தடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது.
இந்த ரேடார்கள் பொதுவாக போர் கப்பல்களில் முன்பகுதியில் இருக்கும் பிரங்கிகளின் தாக்குதலை கட்டுபடுத்த அதாவது இலக்கை துல்லியமாக தாக்க உதவும் பணியில் பயன்படுத்தி வரப்படுபவை ஆகும்.
அந்த வகையில் இந்திய கடற்படைக்கான கோவா மற்றும் கொல்கத்தாவில் கட்டப்பட உள்ள 11 NGOPV அடுத்த தலைமுறை ரோந்து கலன்களிலும் வேறு கப்பல்களிலும் பயன்படுத்துவதற்காக தான் இந்த ரேடார்கள் வாங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இந்த ரேடார்கள் எப்படியான காலநிலையானாலும் சரி எவ்வளவு மோசமான கடல் கொந்தளிப்பானாலும் சரி துல்லியமாக கடல் மற்றும் வான் இலக்குகளை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்த உதவும் திறன் பெற்றவை ஆகும்.
இவற்றை தயாரிக்க அடுத்த நான்கு ஆண்டு காலகட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் மணி நேரம் தேவைப்படும் இவற்றின் டெலிவரி வருகிற 2027ஆம் ஆண்டு துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.