சவுதி மற்றும் இந்திய உளவுத்துறைகள் இணைந்து பயங்கரவாத ஒழிப்பை மேற்கொள்ள ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • April 9, 2023
  • Comments Off on சவுதி மற்றும் இந்திய உளவுத்துறைகள் இணைந்து பயங்கரவாத ஒழிப்பை மேற்கொள்ள ஒப்பந்தம் !!

கடந்த மார்ச்-28 ஆம் தேதி சவுதி அரேபிய கேபினட் அமைச்சரவை அந்நாட்டு உளவுத்துறை இந்திய உளவுத்துறையுடன் இணைந்து செயலாற்றுவதற்கான அனுமதியை வழங்கி உள்ளது இதன் மூலம் சவுதி அரேபியா மற்றும் இந்தியா இடையிலான உறவில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி சவுதி அரேபிய உளவுத்துறையான PSS – Presidency of State Security இந்திய உளவுத்துறையான RAW – Research & Analysis Wing உடன் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத நிதி ஆதார ஒழிப்பு பணிகளில் கூட்டாக செயல்படும்.

சவுதி அரேபியா மத்திய கிழக்கில் ஐக்கிய அரபு அமீரகம், சிரியா, ஒமன், எகிப்து, ஈராக் போன்ற நாடுகளை போலவே இந்தியாவின் முக்கிய பயங்கரவாத எதிர்ப்பு கூட்டாளியாக உருவெடுத்து உள்ளது தற்போது இரு நாடுகள் இடையேயும் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான ஏராளமான தகவல்கள் பரிமாறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கடந்த 2019ஆம் ஆண்டு சவுதி அரேபிய பட்டத்து இளவரசரும் அந்நாட்டு பிரதமருமான மொஹம்மது பின் சல்மான் இந்தியா வந்த போது இந்திய உளவுத்துறை உடன் இணைந்து செயலாற்றுவது பற்றிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

இதனை மிக நீண்ட காலமாக இந்திய அதிகாரிகளும் எதிர்பார்த்தனர் காரணம் சவுதி அரேபியாவை இரட்டை கோபுர 9/11, மும்பை தாக்குதல் 26/11 ஆகிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டோர் பதுங்கி கொள்ளும் இடமாக பயன்படுத்தி வந்தனர்.

1993 மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான அனீஸ் இப்ராஹீமை ஜெடா விமான நிலையத்தில் கைது செய்த போதும் இந்திய கோரிக்கைகளை மதிக்காமல் சவுதி அதிகாரிகள் அவனை விடுவித்தனர் இந்த நிலை படிப்படியாக மாறியது.

2012ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று சவுதி அரேபியா மும்பை தாக்குதல் 26/11 குற்றவாளியான சையத் சபியூதீன் அன்சாரியை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தியது இதனபிறகு மொஹம்மது பின் சல்மான் அதிகாரத்திற்கு வந்த பிறகு காட்சிகள் வேகமாக மாறின.

ஜிஹாதி தயாரிப்பு மையம் என்று அழைக்கப்படும் சவுதி அரேபியாவின் நிலையை அவர் மாற்ற விரும்பினார், இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, உளவுத்துறை சீரமைக்கப்பட்டது, பாகிஸ்தான் உளவுத்துறையின் செயல்பாடுகள் பெருமளவில் முடக்கப்பட்டது.

இன்று இந்திய உளவுத்துறை மத்திய கிழக்கில் எதிர்பார்த்திருந்த முக்கிய கூட்டாளியாக மத்திய கிழக்கின் திறன் மிகுந்த உளவுத்துறையான சவுதி அரேபியாவின் PSS உருவெடுத்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.