நீர்மூழ்கி ஒப்பந்தத்தில் இரு அரசுகளும் நேரடியாக பங்கேற்கும் திட்டத்தை முன்மொழிய உள்ள ஜெர்மனி !!

  • Tamil Defense
  • April 6, 2023
  • Comments Off on நீர்மூழ்கி ஒப்பந்தத்தில் இரு அரசுகளும் நேரடியாக பங்கேற்கும் திட்டத்தை முன்மொழிய உள்ள ஜெர்மனி !!

இந்தியா கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் படையணியின் பலம் குன்றி வரும் நிலையில் அதனை சமாளிக்க P-75 I (Project 75 India) எனுமீ திட்டத்தின் கீழ் ஆறு அதிநவீன டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் இந்திய பங்குதாரர்களாக மும்பை MDL Mazagon Docks Limited மஸகான கப்பல் கட்டுமான தளம் மற்றும் சென்னை காட்டுபள்ளி L & T Larsen & Toubro லார்சென் மற்றும் டூப்ரோ கப்பல் கட்டுமான தளம் ஆகியவை இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் இந்த 45,000 கோடி மதிப்பிலான திட்டத்தில் கலந்து கொள்ள ரஷ்யாவின் Rosboronexport, ஜெர்மனியின் TKMS ThyssenKrupp Marine Systems, ஸ்பெயினுடைய Navantia, ஃபிரான்ஸின் Naval Group, தென்கொரியாவின் Daewoo Ship Building & Marine Engineering ஆகிய நிறுவனங்கள் விரும்புகின்றன.

இந்த திட்டத்தில் இந்திய கடற்படை வைத்துள்ள பல நிபந்தனைகள் காரணமாக பல நிறுவனங்கள் சாத்தியமற்ற நிபந்தனைகள் உள்ளதாகவும், உருவாக்கப்படாத நீர்மூழ்கி டிசைனை கோருவதாகவும் கூறி வெளியேறி உள்ளன.

இந்த நிலையில் ஜெர்மனி இந்திய கடற்படை விதிகளையும் நிபந்தனைகளையும் தளர்த்தினால் திட்டத்தில் கலந்து கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது, இந்த நிலையில் தற்போது ஜெர்மனி தரப்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது இந்த ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளின் அரசுகளுக்கும் நேரடி பங்களிப்பு உள்ள G2G Government to Government deal திட்டத்தை ஜெர்மனி முன்மொழியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஜெர்மனி வேந்தர் ஒலாஃப் ஷ்கோல்ஸ் இந்தியா வந்த போது பிரதமர் மோடியுடன் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், சில மாதங்களில் ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் இந்தியா வரும் போது இந்த திட்டம் முன்மொழியப்படலாம் என கூறப்படுகிறது.