கசிந்த அமெரிக்க ஆவணங்கள்: ரஷ்யாவுக்கு ரகசியமாக ராக்கெட் சப்ளை செய்ய திட்டமிட்ட எகிப்து !!

  • Tamil Defense
  • April 13, 2023
  • Comments Off on கசிந்த அமெரிக்க ஆவணங்கள்: ரஷ்யாவுக்கு ரகசியமாக ராக்கெட் சப்ளை செய்ய திட்டமிட்ட எகிப்து !!

சமீபத்தில் அமெரிக்க உளவுத்துறை ரகசிய ஆவணங்கள் அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகானில் இருந்து சமுக வலைதளங்களில் கசிந்து உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் ஃபெப்ரவரி 17ஆம் தேதியை கொண்ட ஆவணம் ஒன்றில் எகிப்து ரகசியமாக ரஷ்யாவுக்கு ராக்கெட்டுகளை தயாரித்து அனுப்ப திட்டமிட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதாவது எகிப்து அதிபர் அல் சிசி மூத்த எகிப்திய ராணுவ அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமார் 40 ஆயிரம் ராக்கெட்டுகளை தயாரித்து ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்குமாறும் இந்த திட்டத்தை ரகசியமாக வைக்குமாறும் இல்லையெனில் மேற்குலக நாடுகளுடன் பிரச்சினை ஏற்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில் மேற்குறிப்பிட்ட உளவு தகவல் உண்மைதான் ஆனால் எகிப்து அந்த திட்டத்தை செயல்படுத்தியதை செயல்படுத்தியதாக எந்தவித ஆதாரமோ தகவலோ இல்லை என கூறியுள்ளார்.

எகிப்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் பேசுகையில் உக்ரைன் போரில் எகிப்து நடுநிலை வகிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் கோட்பாடுகளை பின்பற்றி வருவதாகவும் கூறி மேற்குறிப்பிட்ட தகவல்களை நிராகரித்து பேசி உள்ளார்.

எகிப்திய அதிபர் அல் சிசி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளிகளில் ஒருவர் ஆவார், இவர் இப்படி ரஷ்யாவுக்கு உதவ திட்டமிட்டதாக கூறப்படுவதும், முக்கிய கூட்டாளியான அவரை அமெரிக்கா வேவு பார்த்ததும் ஒரு சேர பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.