இந்தியாவுக்கு அந்தமான் அருகே பாதுகாப்பு சிக்கலை உண்டு பண்ணும் மியான்மர் மற்றும் சீனா !!

  • Tamil Defense
  • April 4, 2023
  • Comments Off on இந்தியாவுக்கு அந்தமான் அருகே பாதுகாப்பு சிக்கலை உண்டு பண்ணும் மியான்மர் மற்றும் சீனா !!

அந்தமானுக்கு வடக்கே 55 கிலோமீட்டர் தொலைவிலும், மியான்மரின் யாங்கூனில் இருந்து 414 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள தீவு கூட்டம் தான் கோகே தீவுகள் ஆகும், 1994ஆம் ஆண்டு மியான்மர் இந்த தீவுகளின் சில பகுதிகளை சீனாவுக்கு குத்தகைக்கு கொடுத்தது.

இடையில் ஜனநாயக ஆட்சி மலர்ந்து ஆங் சாங் சூகி தலைமையிலான அரசு இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வந்த நிலையில் மீண்டும் ராணுவம் ஆட்சியை கைபற்றிய நிலையில் சீனாவுடனான நெருக்கம் பன்மடங்கு அதிகரித்து வருகிறது, தற்போது இந்த கூட்டணியால் ஒரு புதிய பாதுகாப்பு சவால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

அதாவது கோகோ தீவில் புதிய ராணுவ உள்கட்டமைப்புகளை சீனா ஏற்படுத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது அதாவது கிரேட் கோகோ தீவை Maxar Technologies நிறுவனம் எடுத்த செயற்கைகோள் புகைப்படங்களில் ஒரு உயர்மட்ட பாதை, தங்குமிடம், இரண்டு விமான நிறுத்துமிடங்கள் ஆகியை காணப்படுகின்றன.

இவற்றிலிருந்து மிக அருகில் 2.3 கிலோமீட்டர் நீள விமான ஒடுபாதை மற்றும் ஒரு ரேடார் மையம் ஆகியவையும் காணப்படுகின்றன, மேலும் இந்த பகுதிக்கு தெற்கே புதிய கட்டுமான பணிகளுக்காக நிலத்தை சீர்திருத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த கிரேட் கோகோ தீவில் ஏறத்தாழ கடந்த இருபது ஆண்டுகளாக சீன நடவடிக்கை உள்ளதாகவும் , சிறப்பு ரேடார்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை வைத்து இந்திய கடற்படை மற்றும் ஏவுகணை சோதனை போன்றவற்றை கண்காணித்து வருவதாக இந்திய பாதுகாப்பு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த கிரேட் கோகோ தீவானது இந்தியாவின் ஒரே முப்படைகள் கட்டளையகம் அமைந்துள்ள அந்தமான் தீவு கூட்டத்தில் இருந்து வெறுமனே 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மியான்மர் சீனா பொருளாதார வழித்தடம் திட்டத்தின் அங்கமாக சீனா மியான்மரில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை செய்து வருகிறது, அதிலும் குறிப்பாக மியான்மரில் ரயில் சாலை மார்க்க உள்கட்டமைப்பு மற்றும் ஆழ்கடல் துறைமுகங்களை சீன நிறுவனங்கள் மியான்மர் ராணுவ பாதுகாப்போடு உருவாக்கி வருகின்றன.

இதன் மூலமாக தற்போது சீன வர்த்தகத்திற்கு பெரும் சவாலாக உள்ள மலாக்கா ஜலசந்தியை கடக்காமல் மியான்மர் வழியாக சீனா கடல்சார் வர்த்தகத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது எனினும் இந்திய கடற்படை மற்றும் விமானப்படையின் ஆதிக்கம் இந்த பகுதியில் மேலோங்கி இருப்பதால்,

இந்த உள்கட்டமைப்புகளை பாதுகாக்க சீனா விரைவில் மியான்மரில் குறிப்பாக கோகோ தீவுகளில் கடற்படை மற்றும் விமானப்படை தளங்களை அமைக்கலாம் என நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர் இதனை உறுதிபடுத்தும் விதமாக இந்தியாவுக்கு அருகாமையில் உள்ள சீன ஆதரவு நாடு ஒன்றில் புதிய விமானப்படை தளம் அமைக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.