
இந்திய கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுஹான் கிழக்கு பிராந்திய படையணிகளை ஆய்வு செய்யும் பொருட்டு மேற்கு வங்க மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியை தளமாக கொண்டு இயங்கி வரும் இந்திய தரைப்படையின் 33ஆவது படைப்பிரிவான திரிஷக்தி கோர் தலைமையகத்திற்கு சென்ற அவர் சிக்கீம் மாநிலத்தில் உள்ள சீன எல்லையோரம் இந்திய படைகளின் தயார் நிலையை கேட்டறிந்தார்.
மேலும் வடக்கு மேற்கு வங்க பகுதியில் இந்திய படைகளின் கட்டுமான பணிகள், நவீனமயமாக்கல் பணிகள் குறித்த ஆய்வு பணிகளையும் அவர் மேற்கொண்டார் பின்னர் படைகளின் சிறப்பான செயல்பாட்டுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
அதன் பிறகு மேற்கு வங்க மாநிலம் ஹஸிமாராவில் அமைந்துள்ள விமானப்படை தளத்திற்கு சென்றார், அங்கு இந்தியாவின் முதல் ரஃபேல் படையணியின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.