பஞ்சாப் பிரிவினைவாதி அம்ரீத்பால் சிங் அசாம் சிறையில் அடைப்பு காரணம் என்ன ??

  • Tamil Defense
  • April 26, 2023
  • Comments Off on பஞ்சாப் பிரிவினைவாதி அம்ரீத்பால் சிங் அசாம் சிறையில் அடைப்பு காரணம் என்ன ??

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வாரிஸ் தே பஞ்சாப் எனும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவனான அம்ரீத்பால் சிங் நாட்டை துண்டாட போவதாக விட்ட மிரட்டலை அடுத்து காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் களத்தில் இறங்கி கைது செய்தனர்.

இதனையடுத்து பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் நகருக்கு விமானம் மூலமாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அம்ரீத்பால் சிங்கை காவல்துறையினர் கைது செய்து திப்ரூகர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கு காரணம் மேற்கு இந்திய அல்லது வட இந்திய சிறைகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் அடைக்கப்பட்டு உள்ளதே ஆகும், இவர்களுடனான தொடர்பை தடுக்கவும், சிறை அதிகாரிகளுடனான தொடர்பை தடுக்கும் விதமாக மொழி சிக்கல் கொண்ட அசாம் மாநிலத்தில் அவனை அடைத்துள்ளனர்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த சிறையின் 170ஆண்டு கால வரலாற்றில் மிகப்பெரிய அளவில் சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற நிகழ்வுகள் ஏதும் இல்லை வடகிழக்கு இந்தியாவின் மிக பாதுகாப்பான சிறைகளில் இதுவும் ஒன்றாகும், பல உல்ஃபா ULFA பயங்கரவாதிகள் இங்கு அடைத்து வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது இந்த சிறை வளாகத்தில் 24 மணி நேரமும் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அசாம் காவல்துறை அதிரடிப்படையினர், CRPF படையினர் குவிக்கப்பட்டுள்ளனர், பல கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன என்பது கூடுதல் தகவல்களாகும்.