அமெரிக்க கப்பல்களை கண்காணித்தும், ஜப்பான் கடலில் ஏவுகணை ஏவியும் பயிற்சிகளில் ஈடுபட்ட ரஷ்ய கடற்படை !!

ரஷ்ய கடற்படையின் பசிஃபிக் படைப்பிரிவை சேர்ந்த ஏவுகணை கலன்கள் ஜப்பான் கடல் பகுதியில் பயிற்சிகளில் ஈடுப்பட்ட காணொளியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கில் வெளியிட்டு உள்ளது.

அதில் இரண்டு சோவியத் காலகட்ட தயாரிப்பான SS-N-22 Sunburn என நேட்டோ அழைக்கும் P-270 Moskit மாஸ்கிட் சூப்பர்சானிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகள் மீது ஏவி வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதை காண முடிகிறது.

இந்த பயிற்சிகளை தொடர்ந்து ஜப்பான் வெளியுறவு அமைச்சர் யோஷிமாஸா ஹயாஷி பேசும்போது ஜப்பான் தொடர்ந்து விழிப்புடன் செயல்படும் எனவும் கிழக்கில் ரஷ்யாவின் அதிகரிக்கும் ராணுவ செயல்பாடுகள் கவலை அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையே ரஷ்ய கட்றபடை கப்பல்கள் புதன்கிழமை அன்று கொரிய தீபகற்ப பகுதியில் தென்கொரிய படைகளுடன் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த அமெரிக்க கடற்படை கப்பல்களை பின்தொடர்ந்து கண்காணித்த தகவலும் வெளியாகி உள்ளது.

அமெரிக்க கடற்படையின் USS MAKIN ISLAND கப்பலில் இருந்து 15 மைல் தொலைவில் நிலை கொண்டிருந்த ரஷ்ய கடற்படையின் உளவு கப்பல் ஒன்று கண்காணித்து கொண்டே இருந்ததாக மேகின் ஐலண்ட் கப்பல் கட்டளை அதிகாரி கேப்டன். டோனி சாவேஸ் தெரிவித்தார்.

USS MAKIN ISLAND மற்றும் அதன் துணை கப்பல்களான USS JOHN P MURTHA மற்றும் USS ANCHORAGE ஆகிய கப்பல்களை கொரிய தீபகற்ப பகுதிக்கு வரும் வழியில் தென்சீன கடல் பகுதியில் சீன கடற்படை கப்பல்கள் பின்தொடர்ந்து கண்காணித்தது கூடுதல் தகவலாகும்.