அமெரிக்க பயிற்சி பெற்ற ஆஃப்கன் சிறப்பு படை கமாண்டோக்களை உக்ரைனில் களமிறக்கும் ரஷ்யா !!

  • Tamil Defense
  • March 18, 2023
  • Comments Off on அமெரிக்க பயிற்சி பெற்ற ஆஃப்கன் சிறப்பு படை கமாண்டோக்களை உக்ரைனில் களமிறக்கும் ரஷ்யா !!

அமெரிக்க மற்றும் நேட்டோ பயிற்சி பெற்று ஆஃப்கானிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி தாலிபான்களுக்கு எதிராக கடும் போர் புரிந்த அனுபவம் கொண்ட முன்னாள் ஆஃப்கானிஸ்தான் சிறப்பு படை வீரர்களை ரஷ்யா உக்ரைனில் களமிறக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது ரஷ்யாவை சேர்ந்த தனியார் ராணுவ நிறுவனமான WAGNER Group வாக்னர் குழுமம் தான் தற்போது இந்த முன்னாள் ஆஃப்கானிஸ்தான் சிறப்பு படை கமாண்டோ வீரர்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்து பணியமர்த்தி உக்ரைனில் களமிறக்கி உள்ளது.

இந்த முன்னாள் ஆஃப்கானிஸ்தான் சிறப்பு படை கமாண்டோ வீரர்கள் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறிய பிறகும் தாலிபான்களுக்கு எதிராக கடும் சண்டையிட்டு வந்த நிலையில் ஒட்டுமொத்த ஆஃப்கன் நிர்வாகமும் சரணடைந்த நிலையில் தங்களையும் தங்களது குடும்பங்களையும் பாதுகாத்து கொள்ள ஈரானில் அடைக்கலம் புகுந்தனர்.

அப்படி ஈரானில் அடைக்கலம் புகுந்தவர்கள் தான் ஈரான் அரசின் உதவியோடு ரஷ்யாவின் வாக்னர் குழுமத்தில் இணைந்து வருகின்றனர், இவர்களின் அனுபவம் உக்ரைனில் பெரும் உதவியாக இருக்கும் என ரஷ்ய தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்னர் குழும தலைவர் யெவ்கெனி ப்ரிகோஸின் கூறும்போது ஆஃப்கன் ராணுவத்தில் பணியாற்றும் போது அமெரிக்க தயாரிப்பு M-777 ரக பிரங்கிகள் மற்றும் Javelin ATGM டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இயக்கும் அனுபவம் பெற்ற வீரர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளதாகவும் அவர்களை கொண்டு வாக்னரின் பிரங்கி படை உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.