இந்திய பெருங்கடலில் QUAD உள்ளிட்ட பன்னாட்டு கடற்படைகள் கூட்டு பயிற்சி !!
1 min read

இந்திய பெருங்கடலில் QUAD உள்ளிட்ட பன்னாட்டு கடற்படைகள் கூட்டு பயிற்சி !!

ஃபிரெஞ்சு கடற்படை இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் உள்ள தனது கூட்டாளிகளுடன் இணைந்து சுதந்திரமான இந்தோ பசிஃபிக் கொள்கையை முன்னிறுத்தி லா பெரூஸ் எனும் பன்னாட்டு கடற்படை பயிற்சியை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான கூட்டு பயிற்சிகள் இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது இன்றுடன் இந்த கூட்டு பயிற்சிகள் நிறைவு பெற உள்ளன, இதில் இந்தியா அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய QUAD கடற்படைகளும் ஃபிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து கடற்படைகளும் கலந்து கொண்டுள்ளன.

இந்த பயிற்சிகளின் போது கடற்பரப்பு போர்முறை, நீரடி போர்முறை, வான் பாதுகாப்பு, வானூர்தி எதிர்ப்பு போர்முறை, தந்திரோபாய நகர்வுகள், ஒவ்வொரு நாட்டு ஹெலிகாப்டர்களும் மற்ற நாட்டு கப்பல்களில் இருந்து இயங்குவது தரை இறங்குவது போன்ற முக்கிய பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்திய கடற்படை சார்பில் INS Sahyadri சஹ்யாத்ரி வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஃப்ரிகேட் கப்பல் மற்றும் INS JYOTI ஜோதி டேங்கர் கப்பல் ஆகியவை கலந்து கொண்டுள்ளன என இந்திய கடற்படையின் செய்தி தொடர்பாளர் கமாண்டர் விவேக் மாத்வால் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஃபிரெஞ்சு கடற்படை சார்பில் FS Dixmude டிக்ஸ்மியூட் எனும் ஹெலிகாப்டர் தாங்கி கப்பல் மற்றும் FS La Fayette எனும் ஃப்ரிகேட் கப்பலும் கலந்து கொள்கின்றன ஆனால் பிற நாட்டு கப்பல்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.