மீண்டும் முன்னாள் இந்திய கடற்படையினரின் பெயில் மனு கத்தாரில் நிராகரிப்பு !!

  • Tamil Defense
  • March 18, 2023
  • Comments Off on மீண்டும் முன்னாள் இந்திய கடற்படையினரின் பெயில் மனு கத்தாரில் நிராகரிப்பு !!

கத்தார் நாட்டில் தொடர்ந்து எட்டு மாதங்களாக தனிமை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள எட்டு முன்னாள் இந்திய கடற்படையினரின் பெயில் மனு மீண்டும் கத்தார் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள Dahra Global Technologies & Consultancy Services எனும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர், கத்தார் கடற்படைக்கு பயிற்சி அளித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி தீடிரென இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை கைது செய்தது கத்தார் உளவுத்துறையான State Security Bureau ஆகும் ஆனால் இவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது பற்றிய சரியான விளக்கமும் இந்திய அரசுக்கோ இந்திய தூதரகத்திற்கோ வழங்கப்படவில்லை.

ஆனால் கடந்த ஆண்டு தொழில் ரீதியாக அறிமுகம் ஆன இந்திய தூதரக அதிகாரி ஒருவருடன் நட்பு ரீதியாக இந்த எட்டு பேரும் சந்தித்து பேசியதாகவும் இதை தொடர்ந்து கத்தார் கடற்படை சார்ந்த தகவல்களை இவர்கள் இந்திய அதிகாரியுடன் பகிர்ந்ததாக கத்தார் உளவுத்துறை சந்தேகமடைந்து இவர்கள் எட்டு பேரும் உளவாளிகள் என்ற அடிப்படையில் கைது செய்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் 16ஆம் தேதி இவர்களின் பெயில் மனு குறித்த விசாரணையின் போது கத்தார் நீதிமன்றம் மீண்டும் மனுவை நிராகரித்து மேலும் 30 நாட்கள் சிறைவாசத்தை கூட்டி உள்ளது, அதே நேரத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் குடும்பத்தினர் நம்பிக்கை இழந்து பிரதமர் மோடி நேரடியாக இதில் தலையிட்டு கத்தார் மன்னருடன் பேசி எட்டு பேருக்கும் விடுதலை வாங்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.