
கடந்த 2008ஆம் ஆண்டு ஆமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் Lockheed Martin நிறுவனம் தயாரிக்கும் TPS-77 Multi Role Radar பல திறன் ரேடார்கள் சிலவற்றை பாகிஸ்தான் விமானப்படை வாங்கியது.
தற்போது அவற்றில் ஒன்றை இந்திய எல்லையோரம் நிலைநிறுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது, இதனை சிந்த் மாகாணத்தில் சர்வதேச எல்லையில் இருந்து 58 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோர் கன்டோன்மென்ட பகுதியில் நிலைநிறுத்த உள்ளனர்.
இதே போன்றதோரு TPS-77 ரேடாரை சிந்த் மாகாணத்தில் உள்ள பாதின் பகுதியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதும் அந்த பகுதியும் இந்திய எல்லையில் இருந்து மிக அருகாமையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ரேடார் 400 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு கண்காணிக்க கூடியது, இதை லாரி, ஹெலிகாப்டர், ராணுவ போக்குவரத்து விமானம், ரயில் என சூழலுக்கு ஏற்ப பல்வேறு விதமாக மிகவும் எளிதாக நகர்த்தி கொள்ள முடியும்.
மிக குறைந்த சக்தியை உபயோகித்து அதிக திறனுடன் அதிகபட்சமாக 463 கிலோமீட்டர் தொலைவும் குறைந்தபட்சமாக 150 கிலோமீட்டர் தொலைவு தூரத்தில் வரும் ட்ரோன்கள் ஏவுகணைகள் போர் விமானங்கள் ஆகியவற்றை கண்டறியும் திறன் கொண்டதாகும்.
இதனை இந்திய எல்லைக்கு அருகே நகர்த்துவதன் மூலமாக இந்திய வான் கடல்சார் மற்றும் தரை பகுதிகளில் இந்திய படைகளின் வான் சார்ந்த நடவடிக்கைகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் ஆகவே இந்த பகுதிகளில் இந்தியா மின்னனு போர் முறையை கையாள வேண்டியது அவசியமாகும்.