அணு ஆயுத நீர்மூழ்கி ட்ரோனை சோதனை செய்த வடகொரியா !!

  • Tamil Defense
  • March 28, 2023
  • Comments Off on அணு ஆயுத நீர்மூழ்கி ட்ரோனை சோதனை செய்த வடகொரியா !!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வடகொரியா ஒரு அணு ஆயுத நீர்மூழ்கி ட்ரோனை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது ஆனால் வல்லுநர்கள் இதற்கான தகுந்த ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிடாத வரை நம்ப முடியாது என கூறுகின்றனர்.

வடகொரியாவின் அரசுடைமை செய்தி நிறுவனமான KCNA – Korean Central News Agency அதாவது கொரிய மத்திய செய்தி முகமை “Haeil” ஹெயில் எனப்படும் இந்த அணு ஆயுத நீர்மூழ்கி ட்ரோன் மார்ச் 21 ஏவப்பட்டு சுமார் 59 மணி நேரம் கடலில் சுற்றி வந்து 23ஆம் தேதி அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதியில் வெடித்ததாகவும்,

இந்த சோதனையின் நோக்கம் அணு ஆயுதத்தை கடலுக்கு அடியே யாருக்கும் தெரியாத வண்ணம் நீண்ட தூரம் கொண்டு சென்று எதிரி கடற்படை அணிகள் அல்லது முக்கிய துறைமுகங்கள் அல்லது கடற்படை தளங்கள் அருகே வெடிக்க வைத்து ராட்சத கதிர்வீச்சு கலந்த சுனாமி அலைகளை ஏற்படுத்தி தாக்குதவதே ஆகும் என செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆயுதத்திற்கான 2012ஆம் ஆண்டு முதலே துவங்கியதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐம்பதுக்கும் அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாகவும், கடைசியாக நடத்தப்பட்ட சோதனை மூலம் முழு திறன் நிருபிக்கப்பட்டு உள்ளதாகவும் இனி கப்பல்கள் அல்லது கடற்கரையோர பகுதிகளில் இருந்து இவற்றை ஏவி பயன்படுத்த தயார் எனவும் கூறியுள்ளது.

ஆனால் சர்வதேச வல்லுநர்கள் வடகொரியாவின் இந்த அறிவிப்பை நம்ப மறுக்கின்றனர் பலமுறை வடகொரியா ஆயுத தளவாடங்கள் பற்றி மிகைப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளது இந்த முறை இப்படி ஒரு ஆயுதம் இருப்பதற்கான ஒரு ஆதாரத்தை கூட வெளியிடவில்லை என கூறுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.