
புதன்கிழமை அன்று தென்கொரிய மற்றும் அமெரிக்க மரைன் கோர் படைகள் தென்கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள பொஹாங் பகுதியில் சாங் யாங் என்ற பெயரிலான கூட்டு பயிற்சிகளை நடத்தின.
இதில் இரு நாட்டு படைகளும் பல்வேறு அதிநவீன தளவாடங்களை பயன்படுத்தின, முதலில் தென்கொரிய படைகள் 23 டன்கள் எடை கொண்ட நிலநீர் கவச வாகனங்களில் கரைக்கு வந்து சேர்ந்தன, தொடர்ந்து ஹோவர்கிராஃப்ட் கலன்களில் அமெரிக்க படைகள் கவச வாகனங்களில் வந்தடைந்தன.
இதை தொடர்ந்து அமெரிக்க ஐந்தாம் தலைமுறை F-35 விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தரையில் உள்ள படைகள் முன்னேறின, இது தவிர Osprey வானூர்திகள் மூலமாகவும் வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
இவைகள் கரையில் இருந்து 30 மைல் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு இருந்த 40,000 டன்கள் எடை கொண்ட USS MAKIN ISLAND கப்பலில் இருந்து இயங்கின, இதை தவிர பொஹாங் கடற்கரை அருகே ஆறு தென்கொரிய கடற்படை கப்பல்களும் தென்கொரிய படைகளை கரைக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டு பயிற்சிகள் குறித்து வடகொரியா தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது அதாவது இரண்டு நாடுகளும் வடகொரியாவை சீண்டும் வகையில் இந்த பயிற்சிகளை நடத்தி வருவதாகவும் இத்தகைய செயல்கள் காரணமாகவே அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாகவும் வடகொரியா கூறியுள்ளது.
ஆனால் இதற்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர், அமெரிக்க மரைன் கோரின் 13ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கர்னல். சாமுயேல் மெயர் கூறும்போது 70 ஆண்டு கால வயலாற்றை உடைய இந்த கூட்டு பயிற்சிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெறவில்லை அதை மீண்டும் துவங்கி உள்ளோம் என்றார்.