சுதேசி போர் விமான தப்பிக்கும் இருக்கை திட்டம் !!

இந்திய விமானப்படை அடுத்த இருபது ஆண்டுகளில் சுமார் 470 இந்திய தயாரிப்பு போர் விமானங்கள் மற்றும் 80 முதன்மை பயிற்சி போர் விமானங்கள் வரை வாங்க உள்ளதாக HAL Hindustan Aeronautics Limited நிறுவனத்தின் அதிகாரிகள் கடந்த ஆண்டு தெரிவித்தனர்.

தற்போது இந்த விமானங்களுக்கான Ejection Seats எனப்படும் தப்பிக்கும் விமானி இருக்கைகள் இறக்குமதி செய்யபட்டு வருகின்றன, எதிர்காலத்தில் மேலை நாடுகளுடன் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நமது விமானங்களுக்கும் சரி நாம் ஏற்றுமதி செய்யும் விமானங்களுக்கும் சரி தப்பிக்கும் இருக்கைகள் மற்றும் அவற்றிற்கான உதிரி பாகங்கள் கிடைக்காமல் போகும்.

ஆகவே இதை கருத்தில் கொண்டு இந்தியாவிலேயே தப்பிக்கும் இருக்கைகள் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதற்காக ஒரு இந்திய நிறுவனத்துடனும் ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த ஏரோ இந்தியா Aero India கண்காட்சியில் ஒரு HAL மூத்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த சுதேசி தப்பிக்கும் இருக்கைகள் 5 முதல் 6 அடி உயரமும் 48 முதல் 108 கிலோ வரை எடை கொண்ட ஆண் மற்றும் பெண் போர் விமானிகளுக்கு எவ்வித கஷ்டமும் ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.