பயிற்சி பட்டாலியனை வழிநடத்தும் இந்திய தரைப்படையின் முதலாவது பெண் அதிகாரி !!

  • Tamil Defense
  • March 2, 2023
  • Comments Off on பயிற்சி பட்டாலியனை வழிநடத்தும் இந்திய தரைப்படையின் முதலாவது பெண் அதிகாரி !!

MEG Madras Engineering Group / Madras Sappers எனப்படும் இந்திய தரைப்படையின் பொறியியல் படைப்பிரிவின் ரெஜிமென்ட்டல் மையமானது பெங்களூர் நகரில் அமைந்துள்ளது, இங்கு தான் MEG வீரர்கள் அடிப்படை ராணுவ பயிற்சி மற்றும் பொறியியல் பணிகள் சார்ந்த பயிற்சிகளையும் பெறுகின்றனர்.

MEG இந்திய தரைப்படையின் பழமையான மற்றும் சிறப்பான பொறியியல் படைகளில் ஒன்றாகும் மேலும் அணிவகுப்பில் இந்திய தரைப்படையிலேயே சிறப்பான படைப்பிரிவாகும், போர் களத்திலும் மிக மிக சிறப்பாக பணியாற்றி உள்ளது இந்த படைப்பிரிவு, ஐ பட வில்லன் காமராஜ் போன்ற புகழ்பெற்ற ஆணழகன் வீரர்களையும் உருவாக்கி உள்ளது,இத்தகைய சிறப்புகள் கொண்ட இந்த படைப்பிரிவு தற்போது மற்றொரு சிறப்பையும் பெற்றுள்ளது.

அதாவது இதுவரை இந்திய தரைப்படையில் ஒரு பயிற்சி பட்டாலியனை ஒரு பெண் அதிகாரி வழிநடத்திய வரலாறு இல்லை, அதனை மாற்றும் விதமாக கர்னல் நோரீன் ஷேனட் ஜாண் என்கிற பெண் அதிகாரி தற்போது MEG பயிற்சி பட்டாலியன் ஒன்றின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவரது பணி இவரது பட்டாலியனில் உள்ள பயிற்சி வீரர்களின் பயிற்சியை தனது கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் இடைநிலை அதிகாரிகளின் உதவியோடு அவர்களுக்கு தலைமை தாங்கி கண்காணித்து சிறப்பான பயிற்சி அளித்து இந்திய தரைப்படையிடம் முழுமையான பொறியியல் போர் வீரர்களாக ஒப்படைப்பதாகும்.

கர்னல் நோரீன் ஷேனட் ஜாண் MEG படைப்பிரிவின் மூத்த அதிகாரி என்ற நிலையில் ஏற்கனவே பல முக்கியமான பணிகளை திறம்பட செய்துள்ளதாகவும், இந்திய தரைப்படை அதிகாரிகளை தேர்வு செய்யும் நேர்முக தேர்வு மையங்களில் ஒன்றான அலகாபாத் மையத்தில் GTO Group Testing Officer குழு சோதனை அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.