இந்திய கடற்படையின் சூப்பர் விமானந்தாங்கி கப்பல் திட்டம் 38,000 கோடி ரூபாய் தேவை !!

  • Tamil Defense
  • March 11, 2023
  • Comments Off on இந்திய கடற்படையின் சூப்பர் விமானந்தாங்கி கப்பல் திட்டம் 38,000 கோடி ரூபாய் தேவை !!

இந்திய கடற்படை மீண்டும் ஒரு விக்ராந்த் ரக விமானந்தாங்கி கப்பலை கட்ட திட்டமிட்டு வரும் நிலையில் தற்போது ஒரு சூப்பர் விமானந்தாங்கி கப்பலையும் Super Carrier பெற விரும்புகிறது.

இந்த பிரமாண்ட கப்பலானது சுமார் 65,000 டன்கள் எடை கொண்டதாக இருக்கும் அதாவது 44,000 டன்கள் எடை கொண்ட விக்ராந்த் கப்பலை விடவும் சுமார் 21,000 டன்கள் எடை கூடுதலாக இருக்கும்.

மேலும் விக்ராந்த் ரக கப்பலை கட்ட ஏறத்தாழ 3 பில்லியன் டாலர்களுக்கும் சற்றே அதிகமாக அதாவது 23,000 கோடி ரூபாய் ஆனது, ஆனால் இந்த சூப்பர் விமானந்தாங்கி கப்பலுக்கு 5 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக அதாவது ஏறத்தாழ 38,000 கோடி ரூபாய் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதுவும் இந்த கப்பலில் இருந்து பெரிய போர் போர் விமானங்களை ஏவும் திறன் கொண்ட அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தி வரும் EMALS எனப்படும் மின்காந்த ஏவும் அமைப்பு மற்றும் விமானங்களை நிறுத்த உதவும் அதிநவீன நிறுத்தும் AAG அமைப்பு ஆகியவை இந்த CATOBAR அதாவது முன்புறம் விமானங்கள் மேலேழும்பும் பகுதி சமதளமாக இருக்கும் கப்பலில் இணைக்கப்படும்.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் மேற்குறிப்பிட்ட EMALS Electro Magnetic Assisted Launching System மற்றும் AAG Advanced Arrestor Gear ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் மட்டுமே சுமார் 1 பில்லியன் டாலர்கள் அதாவது 7,500 கோடி ரூபாய் தேவைப்படும் என்பதாகும், இது சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்று என்றால் மிகையாகாது.