
சென்னையை சேர்ந்த Hawkins Defence Services எனப்படும் தனியார் பாதுகாப்பு துறை நிறுவனம் ஆஸ்திரலியாவை சேர்ந்த Amphibian Aerospace Industries நிறுவனத்துடன் இணைந்து G-111T Albatross எனப்படும் நிலநீர் விமானத்தை தயாரிக்க திட்டமிட்டு உள்ளது.
இந்த G-111T Albatross விமானமானது 1949ல் அமெரிக்கா தயாரித்து பல்வேறு நாடுகள் 1995 வரை பயன்படுத்திய Grumman HU-16 நிலநீர் அதாவது நிலத்திலும் நீரிலும் தரையிறங்கும் விமானத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட வடிவமாகும், மேற்குறிப்பிட்ட ஆஸ்திரேலிய நிறுவனம் இதற்கான அனுமதியை பெற்றுள்ளது 2025 முதல் தயாரிப்பு பணிகள் துவங்க உள்ளது.
இந்த புதிய மேம்படுத்தப்பட்ட G-111T albatross விமானத்தில் இந்த காலகட்டத்திற்கு ஏற்ற அதிநவீன ஏவியானிக்ஸ், ரேடார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் புதிய சக்திவாய்ந்த Pratt & Whitney PT6A-X ரக என்ஜின்களும் இணைக்கப்படும், இதனால் செயல்திறன் உறுதி மற்றும் எரிபொருள் பயன்பாடு சிறப்பாக இருக்கும்.
இந்த விமானத்தின் சில பாகங்கள் மட்டும் ஆரம்பத்தில் தமிழகத்தில் தயாரிக்கப்படும் பின்னர் படிப்படியாக அதிகரித்து அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது 2030 வாக்கில் முழு விமானமும் இங்கேயே தயாரிக்கப்படும்.
இந்த விமானத்தில் 28 பேர் பயணிக்க முடியும் மேலும் 2 விமானிகள் உட்பட 3 விமான குழுவினர் இருப்பர், 4.5 டன்கள் பொருட்களை சுமந்து கொண்டு 12 முதல் 20 மணி நேரம் வரை பறக்கும் ஆற்றல் கொண்டதாகும், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவற்றுக்கு இது மிகவும் ஏற்றதாகும்.
7500 கிலோமீட்டர் கடற்கரை பல கடல்சார் தீவுகளை கொண்ட நமது நாட்டின் கடற்படை மற்றும் கடலோர காவல் படைகளுக்கு இத்தகைய விமானங்கள் மிகவும் இன்றியமையாதவை ஆகும், ஜப்பானிடம் இருந்து இத்தகைய 12 Shinmayva US-2 விமானங்களை வாங்க இந்தியா முயற்சி செய்ததும் ஆனால் விலை காரணமாக திட்டம் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.