
சுமார் அரை நூற்றாண்டிற்கு முன்னர் இந்திய தரைப்படையில் வீரர்களுக்கு கோதுமை மாவு உணவு வழங்க முடிவு செய்யப்பட்ட போது தினை தானிய உணவு வகைகள் நிறுத்தப்பட்டன தற்போது மீண்டும் ராகி, கம்பு, சோளம் ஆகிய தினை தானிய உணவுகள் வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இந்த முடிவை இந்திய தரைப்படை, 2023ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை தினை தானிய ஆண்டாக அறிவித்ததை ஒட்டி எடுத்துள்ளது மேலும் இந்த முடிவு எதிர்காலத்தில் அதிகளவில் இந்திய பாரம்பரிய உணவுகளை ராணுவ வீரர்களின் உணவு பட்டியலில் சேர்க்க வழிவகுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய தரைப்படையின் உணவு தானிய கொள்முதலில் இனி தினை தானியங்கள் சுமார் 25% பங்கு வகிக்கும் எனவும் தரைப்படை சமையல் கலைஞர்களுக்கு தினை தானியங்களை கொண்டு பல்வேறு வகையான சுவையான உணவுகளை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுவதாகவும்
படைப்பிரிவுகளின் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் படை வீரர்களின் வீடுகளிலும் கூட தினை தானிய உணவு வகைகளை சமைத்து சாப்பிட அறிவுறுத்தி உள்ளதாகவும் இதை சாத்தியமாக்க ராணுவ கேண்டின்களிலும் இவற்றை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மூத்த அதிகாரிகள் பேசும் போது தினை தானிய உணவுகள் வாழ்வியல் சார்ந்த நோய்களுக்கு தீர்வாக அமையும் நல்ல ஆரோக்கியம் உடலுக்கு வலு ஆகியவற்றை அளிக்கும் இதனால் வீரர்களும் களத்தில் சிறப்பாக செயல்பட முடியும் என கூறினர்.