படைகளாலேயே உருவாக்கப்பட்டு படைகளில் இணைக்கப்படும் புதிய சுதேசி நவீன அமைப்பு !!
1 min read

படைகளாலேயே உருவாக்கப்பட்டு படைகளில் இணைக்கப்படும் புதிய சுதேசி நவீன அமைப்பு !!

கடந்த 2019ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரின் பட்காம் பகுதியில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான Mi – 17 V5 ரக ஹெலிகாப்டர் ஒன்றை இந்திய விமானப்படையின் வான் பாதுகாப்பு பிரிவு ஊடுருவி வந்த பாகிஸ்தான் வானூர்தி என கருதி சுட்டு வீழ்த்தியது இதில் 6 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் வீரமரணம் அடைந்நனர்.

இந்த சம்பவத்தை அடுத்து விமானப்படை நடத்திய விசாரணையில் ஹெலிகாப்டரில் இருந்த IFF – Identification of Friend or Foe அதாவது எதிரியா அல்லது நட்பு ரீதியான வானூர்தியா என்ற சிக்னல் கொடுக்கும் அமைப்பானது செயல்படாமல் இருந்ததும் ஆகவே தான் நட்பு ரீதியான ஹெலிகாப்டர் என்பதை கண்டறிய முடியாமல் தாக்குதல் நடத்தப்பட்டதும் தெரிய வந்தது.

இந்த பிரச்சினைகளை சரி செய்ய அப்போதே பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது இந்திய விமானப்படையில் இருந்தே இதற்கான தீர்வு உதித்துள்ளது, இந்திய விமானப்படையின் மூத்த ஹெலிகாப்டர்கள் விமானிகளில் ஒருவரான விங் கமாண்டர் விஷால் மிஷ்ரா தான் இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியவர்.

Vayulink என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பானது ஒரு பாதுகாப்பான , முடக்கவோ, இடைமறிக்கவோ முடியாத தகவல் தொடர்பு அமைப்பு மூலமாக சமிக்ஞைகளை வெளிபடுத்தும் இதனை அருகில் உள்ள நமது படையினர் கண்டு எதிரி மற்றும் நட்பு படைகளை பிரித்தறிய முடியும்.

மேலும் இந்த அமைப்பு IFF போல ரேடார் உதவியுடன் இயங்க வேண்டியதோ அல்லது அதை போல வானூர்திகளில் மட்டுமே பயன்படுத்த கூடியதோ அல்ல மாறாக தரை கடல் வான் சார்ந்த எந்த தளவாடத்திலும் சரி பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் தனிப்பட்ட வீரர்களே கூட பயன்படுத்தி கொள்ள முடியும், தரைப்படையில் இந்த கையடக்க அமைப்பு Trishul Link என்ற பெயரில் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகிறது.

விமானப்படையை பொறுத்தவரை முதல்கட்டமாக எல்லையோர படைப்பரிவுகளில் இது இணைக்கப்படும் பின்னர் படிப்படியாக அனைத்து விமானப்படை பிரிவுகள் மற்றும் அவை சார்ந்த தளவாடங்கள் மற்றும் வானூர்திகளில் இந்த அமைப்பு பொருத்தப்படும்.

போர் களத்தில் இந்த அமைப்பானது யார் எதிரி அல்ல என தெளிவான அடையாளத்தை அளிப்பதால் எதிரிகளை சுலபமாக பிரித்தறிந்து நமது படைகளிடையே குழப்பம் இன்றி எதிரிகளை மட்டுமே தாக்க உதவும் இது தவிர விமானிகளுக்கு வானிலை பற்றிய தகவல்களையும் இந்த அமைப்பு உடனுக்குடன் வழங்கும் என்பது இதனுடைய சிறப்பம்சம் ஆகும்.