விரைவில் சுதேசி HJT-36 பயிற்சி போர் விமானத்தின் இறுதி சோதனை !!

நமது பொதுத்துறை நிறுவனமான HAL Hindustan Aeronautics Limited நிறுவனம் தயாரித்துள்ள IJT – Intermediate Jet Trainer அதாவது இடைத்தர பயிற்சி போர் விமானமான HJT – 36 Sitara வின் இறுதி சான்றிதழ் சோதனை விரைவில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிகவும் காலம் தாழ்த்தப்பட்ட இந்த சோதனை அடுத்த 12 மாத காலகட்டதிற்குள் நடைபெறும் என HAL விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர், ஏற்கனவே இந்த விமானம் பல்வேறு கட்ட சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் விமானத்தின் வடிவமைப்பை சீராய்வு செய்து பல்வேறு வகையான மாறுதல்கள் மற்றும் மேம்பாடுகள் செய்யப்பட்டு பல்வேறு அதிநவீன அமைப்புகள் மற்றும் துணை அமைப்புகள் இந்த விமானத்தில் இணைக்கப்பட்டன ஆகவே மீண்டும் ஒரு சோதனை நடத்த வேண்டியது அவசியமாகிறது.

HJT-36 Sitara வின் இறுதிகட்ட சோதனை நிறைவு பெறும் பட்சத்தில் தயாரிப்பு நிலையை விமானம் எட்டி விடும், மேலும் இந்திய விமானப்படை இத்தகைய 70-80 விமானங்களை வாங்கி இரண்டாம் நிலை பயிற்சி விமானமாக பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டு உள்ளது, இதற்கான ஒப்பந்தம் அடுத்த 2-3 ஆண்டுகளில் கையெழுத்து ஆகும் என கூறப்படுகிறது.