நேற்று மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஆவுந்த் கண்டோன்மென்ட் பகுதியில் AFINDEX 2023 என்ற பெயரில் இந்திய ஆஃப்ரிக்க தரைப்படைகள் இடையேயான கூட்டு பயிற்சிகள் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி வருகிற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இந்திய ஆஃப்ரிக்க தரைப்படை தளபதிகளின் கருத்தரங்கம் புனே நகரில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இதில் 21 ஆஃப்ரிக்க நாட்டு தரைப்படை தளபதிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் 24 ஆஃப்ரிக்க தரைப்படைகளின் பார்வையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்
புனே JW MARRIOT ஐந்து நட்சத்திர ஒட்டலில் நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை விருந்தினராக வர உள்ளதாகவும், சிறந்த புவிசார் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் இந்திய ஆஃப்ரிக்க பாதுகாப்பு உறவுகள் பற்றி பேச உள்ளதாகவும்
ஆஃப்ரிக்காவில் இந்திய பாதுகாப்பு தொழில்துறைக்கான வாய்ப்புகள் மேலும் ஆஃப்ரிக்க நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா எந்த வகையில் எல்லாம் உதவ முடியும் என்பது போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த கருத்தரங்கம் மூலமாக இந்தியா மற்றும் ஆஃப்ரிக்க நாடுகள் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தி அதிக அளவில் கூட்டு பயிற்சிகள் நடத்தவும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள சிறப்பான ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், புதிய உலக கட்டமைப்பில் இந்தியா மற்றும் ஆஃப்ரிக்க நாடுகள் முக்கிய பங்காற்றுவதையும் உறுதி செய்து கொள்ள முடியும் என மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் ஆஃப்ரிக்க நாட்டு தரைப்படை தளபதிகள் அதிகாரிகள் பிரதிநிதிகள் பார்வையாளர்கள் ஆகியோருக்கு இந்தியாவின் ஆயுத உற்பத்தி திறன், இந்திய தயாரிப்பு ஆயுதங்கள், அவற்றின் சிறப்பு பயன்பாடு ஆகியவற்றை பற்றியும் விளக்கம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.