BREAKING பிரதமர் அலுவலக அதிகாரி என கூறி எல்லையோர பகுதிகளில் துணை ராணுவ பாதுகாப்புடன் மத்திய மாநில அரசுகளை ஏமாற்றி சுற்றிய குஜராத் நபர் கைது !!
1 min read

BREAKING பிரதமர் அலுவலக அதிகாரி என கூறி எல்லையோர பகுதிகளில் துணை ராணுவ பாதுகாப்புடன் மத்திய மாநில அரசுகளை ஏமாற்றி சுற்றிய குஜராத் நபர் கைது !!

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவன் கிரண் பாய் படேல் இவன் பிரதமர் அலுவலக அதிகாரி அதாவது துணை இயக்குநர் அந்தஸ்து அதிகாரி என கூறி ஜம்மு காஷ்மீரில் முக்கிய பகுதிகளில் துணை ராணுவ பாதுகாப்போடு சுற்றி உள்ளான் மேலும் எல்லையோர பகுதிகளுக்கும் சென்றுள்ளான்.

இந்த தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, நாட்டின் பாதுகாப்பில் மிகப்பெரிய அலட்சியம் காட்டப்பட்டு உள்ளது என்பதை இந்த நிகழ்வு தெள்ள தெளிவாக காட்டுகிறது.

இந்த நபர் மத்திய அரசின் உள்நாட்டு உளவுத்துறை, உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகம், மாநில காவல்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றை ஏமாற்றி
மூன்று முறை குடும்பத்துடன் காஷ்மீர் சென்றுள்ளான், உரி செக்டாரில் உள்ள காமன் எல்லை கட்டுபாட்டு கோடு காவல் சாவடி போன்ற முக்கிய பகுதிகளுக்கு சென்றுள்ளான்.

11 நாட்கள் முன்னர் கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறை இந்த விவகாரத்தை ரகசியமாக வைத்திருந்தது.இந்த நிலையில் வியாழன் அன்று நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் தான் இந்த தகவல் வெளியாகியது. மேலும் முதல் தகவல் அறிக்கை எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நபர் அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைகழகத்தில் PhD பட்டமும், திருச்சி IIM கல்லூரியில் இருந்து MBA பட்டமும், அதை தவிர கணிணி பொறியியல் பட்டமும் பெற்றுள்ளதாக தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

காஷ்மீர் மாநில அதிகாரிகளோடு குஜராத்தில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகளை காஷ்மீர் வரவைப்பது குறித்த ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளான், இந்த நிலையில் ஶ்ரீநகர் மாவட்ட ஆட்சியர் பிரதமர் அலுவலக அதிகாரி சுற்றுபயணம் வருவதாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

இதனையடுத்து காஷ்மீர் காவல்துறை மேற்கண்ட நபரை பற்றி தகவல்களை சேகரிக்க முயன்ற போது உளவுத்துறை அந்த நபர் போலி அதிகாரி எனவும் உடனடியாக கைது செய்யவும் அறிவுறுத்திய நிலையில் இவனை ஒட்டலில் வைத்தே கைது செய்தனர். மேலும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு இடப்பட்டுள்ளது.