தனி நபர் பறக்கும் அமைப்பை இந்திய தரைப்படைக்கு காட்சிபடுத்திய பிரிட்டிஷ் நிறுவனம் !!
இங்கிலாந்தை சேர்ந்தவர் ரிச்சர்ட் ப்ரவ்னிங் இவரது நிறுவனம் தான் Gravity Industries ஆகும், இந்த நிறுவனம் Jetpack Suits எனப்படும் தனிநபர் பறக்கும் கருவிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் அமெரிக்க சிறப்பு படைகளுக்கு தங்களது பறக்கும் கருவியை காட்சிபடுத்திய நிலையில் தற்போது இந்திய தரைப்படையின் சிறப்பு படைகளுக்கும் காட்சிபடுத்தி உள்ளார் ரிச்சர்ட் ப்ரவ்னிங், இந்த நிகழ்வு உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள AATS Army Airborne Training School மையத்தில் நடைபெற்றுள்ளது.
இந்திய தரைப்படையின் சிறப்பு படைகள் பயன்படுத்தி கொள்ள இத்தகைய 48 கருவிகளை போர்க்கால அடிப்படையில் வாங்க கடந்த ஜனவரி மாதம் இந்திய தரைப்படை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இது பற்றி ரிச்சர்ட் ப்ரவ்னிங் கூறும்போது இந்த பறக்கும் அமைப்பு ரோந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஏற்றது, வாகனம் செல்ல முடியாத இடங்களுக்கும் இதன் மூலம் எளிதாகவும் வேகமாகவும் செல்ல முடியும் மேலும் மீட்பு பணிகளின் தன்மையையே மாற்றும் திறன் கொண்டது என கூறினார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த Aero India 2023 ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் Absolute Composite Pvt Ltd எனும் இந்திய நிறுவனம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரித்த பறக்கும் அமைப்பை காட்சிபடுத்தியது, இதில் 70% பாகங்கள் இந்திய தயாரிப்பாகும் வருங்காலத்தில் இதனை 80% வரை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.