போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய சம்பவம் இந்திய விமானப்படையின் விசாரணை நிறைவு !!
கடந்த ஜனவரி 28ஆம் தேதி இந்திய விமானப்படையின் மிராஜ்-2000 மற்றும் சுகோய்-30 ஆகிய போர் விமானங்கள் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சி மேற்கொள்ள புறப்பட்டு சென்றன.
அப்போது இரண்டு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதில் மிராஜ்-2000 மத்திய பிரதேசத்தின் மோரெனா பகுதியில் விழுந்து நொறுங்கியதில் விமானி விங் கமாண்டர் ஹனுமந்த் ராவ் சாரதி துரதிர்ஷ்டவசமாக வீரமரணம் அடைந்தார்.
அதே நேரத்தில் சுகோய்-30 போர் விமானம் ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் பகுதியில் விழுந்து நொறுங்கியது அதிலிருந்த இரண்டு விமானிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர், இந்த விபத்தை தொடர்ந்து இந்திய விமானப்படை தலைமையகம் விசாரணைக்கு உத்தரவிட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் போர் விமானங்களின் கருப்பு பெட்டி, சுகோய் விமானிகளின் வாக்குமூலம் மற்றும் அருகில் பறந்து கொண்டிருந்த மூன்றாவது விமானத்தின் விமானிகளுடைய சாட்சி ஆகியவை கணக்கில் கொள்ளப்பட்டு விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து இந்திய விசாரணை அறிக்கை சட்ட ரீதியாகவும் ஆராயப்பட்டு விபத்திற்கான காரணம் இந்திய விமானப்படையின் தலைமையகத்தால் அறிவிக்கப்படும் என விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.