பேச்சுவார்த்தைக்கு ஈராக் சென்ற ஈரானிய தளபதியை தந்திரமாக கொன்றதா அமெரிக்கா ?? தற்போது சீனாவிடம் வீழ்ச்சி அடைந்த அமெரிக்க அதிகாரம்… ஒரு சிறப்பு கட்டுரை !!
1 min read

பேச்சுவார்த்தைக்கு ஈராக் சென்ற ஈரானிய தளபதியை தந்திரமாக கொன்றதா அமெரிக்கா ?? தற்போது சீனாவிடம் வீழ்ச்சி அடைந்த அமெரிக்க அதிகாரம்… ஒரு சிறப்பு கட்டுரை !!

இரண்டு ஆண்டுகள் முன்னர் ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் முக்கிய ஈரானிய தளபதியான காசெம் சொலைமானி அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அப்போது இந்த சம்பவம் உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மூத்த அமெரிக்க அதிகாரிகள் காசெம் சொலைமானி மீதான தாக்குதல் மூலமாக ஒரு பெரும் போர் தவிர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர், அதிர்ச்சியில் இருந்த ஈரான் பழிவாங்குவோம் என அறிவித்த சில நாட்கள் கழித்து ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது.

ஆனால் அப்போது பெரிய அளவில் பேசப்படாத மற்றொரு விஷயம் என்னவென்றால் அன்றைய ஈராக் பிரதமர் ஆதில் அப்துல் மஹதி ஈரானிய தளபதி ஒரு அமைதி நடவடிக்கை சார்ந்த ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தைக்கு தான் வந்தார் மாறாக அமெரிக்க இலக்குகளை தாக்கும் திட்டத்தை தீட்டும் நோக்கத்துடன் வரவில்லை எனவும் பொது வெளியில் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அதாவது சவுதி அரேபியா மற்றும் ஈரான் இடையிலான பிரச்சினையை தீர்க்க ஈராக் ராஜாங்க ரீதியாக முயற்சி மேற்கொண்டு இருந்தது. ஆகவே அது தொடர்பாக ஈராக் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தான் ஈரானிய தளபதி சொலைமானி ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றதாகவும்,

ஆனால் ஒரு வேளை சவுதி மற்றும் ஈரான் இடையே அமைதி மலர்ந்தால் எங்கே சவுதி அமெரிக்கா-இஸ்ரேல் தலைமையிலான ஈரான் எதிர்ப்பு கூட்டணியில் இருந்து பிரிந்து விடுமோ என கருதி அமெரிக்கா அதனை தடுக்கும் நோக்கில் சொலைமானியை கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதுவும் ஈராக் அரசை அமெரிக்கா நம்ப வைத்து கழுத்தறுத்துள்ளது.அதாவது ஈரான் மற்றும் சவுதி இடையே அமைதியை ஏற்படுத்தும் ஈராக் அரசின் முயற்சிகளுக்கு நன்றி என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈராக் பிரதமர் மஹதியுடன் கூறியுள்ளார்.ஆகவே தான் சொலைமானி ஈராக் வருவது பாதுகாப்பானது என கருதி வந்ததாகவும் ஆனால் அமெரிக்கா தந்திரமாக அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டதாகவும் முன்னாள் ஈராக் பிரதமர் கூறியுள்ளார்.

மேலும் அந்த சமயத்தில் ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி New York Times நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அரசு ஈரானிய தலைவர் அயத்தொல்லா கொமெனி மற்றும் சொலைமானி இடையிலான தகவல்களை இடைமறித்த போது அமெரிக்க இலக்குகள் மீதோ அமெரிக்கா மீதோ தாக்குதல் நடத்த கொமெனி அனுமதியோ உத்தரவோ எதுவும் அளிக்கவில்லை என்பது தெரிய வந்ததாக கூறியுள்ளார்.

இது அப்போது ஈராக் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தொடர்ந்து ஈராக் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமெரிக்க படைகளை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தினர், ஈராக் அரசும் மேலதிக அமெரிக்க வீரர்களை அனுமதிக்க மறுத்துவிட்டது. இதை தொடர்ந்து அமெரிக்கா ஈரானுக்கு பதில் தாக்குதல் நடத்தினால் போர் தொடுக்கப்படும் எனவும் ஈராக்கிற்கு அமெரிக்க படைகள் வெளியேற்ற நினைத்தால் தடை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மிக காட்டமான எச்சரிக்கையை விடுத்தது.

தற்போது இந்த விவகாரம் மீண்டும் பெரிதாக ஒரு முக்கிய காரணம் உள்ளது.அதாவது சவுதி அரேபியா மற்றும் ஈரான் இடையே மீண்டும் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சுமுகமான உறவுகள் ஏற்பட்டுள்ளன.மீண்டும் ராஜாங்க உறவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன, இரு நாடுகளும் கூட்டாக இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.

ஆனால் இந்த முறை இந்த அமைதி முயற்சியை மேற்கொண்டு சாத்தியமாக்கியது வேறோரு பெரும் உலக சக்தியாகும்.ஆம் சீனா தான் அது, சீன அதிபர் ஜி ஜின்பிங் உடைய முயற்சிக்கு தான் பலன் கிடைத்துள்ளது.இது பெரிய அளவில் பேசப்படவில்லை.

காரணம் ஈரான் சவுதி இணைவதை தடுக்க விரும்பும் அமெரிக்கா சீன முயற்சியை தடுக்க முன்வரவில்லை முயலவில்லை.இது புவிசார் அரசியல் ரீதியாக மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவுக்கு பேரடியாகும். அதே நேரத்தில் உலக அரங்கில் சீனாவுக்கு ஒரு உயர்வாகும், ஆகவே புவிசார் அரசியல் ரீதியாக அமெரிக்கா வலுவிழந்துள்ள இந்த விவகாரம் பற்றி மேற்கத்திய அரசுகளோ ஊடகங்களோ பெரிய அளவில் பேசாமல் மவுனம் காத்து வருவது புரிந்து கொள்ள கூடியது தான்.

எது எப்படியோ வருங்காலத்தில் அமெரிக்கா நிச்சயமாக ஈரான் சவுதி உறவுகளை உடைக்க முயலும் தற்போதே அதற்கான பணிகளையும் துவங்கி இருக்கலாம், சவுதி பட்டத்து இளவரசர் மொஹம்மது பின் சல்மான் எப்படி இதனை எதிர்கொள்ள போகிறார் என்பது தான் அவரது பலம் மற்றும் உலக தலைவர்களுக்கான தகுதியை உடையவரா என்பதை வெளிபடுத்தும் சோதனையாக இது அமையும் என்றால் மிகையாகாது.