அமெரிக்கா மீதான போருக்கு தயாராகும் சீனா ??

  • Tamil Defense
  • March 18, 2023
  • Comments Off on அமெரிக்கா மீதான போருக்கு தயாராகும் சீனா ??

சீன ராணுவம் நீண்ட காலமாகவே தற்காப்பு கொள்கையை தான் பின்பற்றி வருகிறது, மேற்கு பசிஃபிக் தெற்கு மற்றும் கிழக்கு சீன கடல் பகுதிகளில் உள்ள தனது நலன்களை பாதுகாக்கும் நோக்கோடு தான் ராணுவ பயிற்சிகளையும் நடத்தி வந்துள்ளது.

ஆனால் சமீப காலமாக சீனாவின் ராணுவ வட்டாரங்களில் தேவை ஏற்பட்டால் அமெரிக்க மண்ணிலேயே போரிடுவது பற்றிய கருத்துக்களும் ஆர்வமும் அதிகரித்து வருவதாகவும் இதற்கு தைவான் ஜலசந்தி, தென் சீன கடல், கொரிய தீபகற்ப பகுதிகளில் அமெரிக்க தலையீடு அதிகரித்து வருவது காரணமாக கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் சீன உளவுத்துறை ஒரு ஆய்வினை நடத்தி ஹைப்பர்சானிக் ஆயுதங்களை பயன்படுத்தி முதலில் தாக்கி அழிக்க வேண்டிய அமெரிக்க இலக்குகளை அடையாளம் கண்டது, இந்த ஆய்வை வுஹான் நகரில் அமைந்துள்ள சீன விமானப்படையின் முன்னெச்சரிக்கை பயிற்சி மையத்தின் உளவு பிரிவை சேர்ந்த யு ஜின்டாவோ எனும் அதிகாரி தலைமையிலான நடத்தியது.

அதில் சீனாவின் முதல்கட்ட தாக்குதல் கலிஃபோர்னியா மாநிலத்தின் யுபா கவுன்டியில் உள்ள பீல் விமானப்படை தளம் Beale AFB மற்றும் மாசாச்சூசஸ் மாநிலத்தில் உள்ள கேப் காட் விண்வெளி படை தளம் Cape Cod Space Force Station மற்றும் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள Clear Space Force Station க்ளியர் விண்வெளி படை தளம் ஆகியவற்றின் மீது பலகட்ட ஹைப்பர்சானிக் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படலாம் எனவும்

அதற்கு காரணம் இந்த தளங்களில் தான் அமெரிக்காவின் மிகப்பெரிய ரேடார் அமைப்புகளில் ஒன்றான AN/FPS – 115 PAVE PAWS ரக கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ரேடார்கள் உள்ளன, இவை மட்டுமின்றி இவற்றை போன்ற வேறு ரேடார் தளங்களும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய ரேடார் தளங்கள் உலகை ஒலியை விட ஐந்து மடங்கு அதிக வேகத்தில் சுற்றி வந்து எதிர்பார்க்காத பாதைகளில் பயணித்து தாக்கும் ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் அல்லது ஹைப்பர்சானிக் ஆயுதங்களுக்கு எளிதான இலக்குள் ஆகும் எனவும்

இத்தகைய தளங்களை தாக்கி அழித்தால் அமெரிக்காவின் கண்காணிப்பு திறன் மற்றும் ஏவுகணை இடைமறிப்பு திறன்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி எதிர்வினை ஆற்றுவதில் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் இது சீனாவுக்கு மிகப்பெரிய அளவில் வலுசேர்க்கும் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.