கூட்டு ராணுவ கட்டளையகங்களை உருவாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் !!

  • Tamil Defense
  • March 17, 2023
  • Comments Off on கூட்டு ராணுவ கட்டளையகங்களை உருவாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் முன்று படைகளையும் உள்ளடக்கிய கூட்டு ராணுவ கட்டளையகங்களை உருவாக்கவும் அவற்றின் கட்டளை அதிகாரிகளுக்கு நிர்வாக மற்றும் ஒழுங்கு அதிகாரங்களை வழங்கவும், ஒருங்கிணைந்த கூட்டு படை அமைப்புகளை உருவாக்கவும் வழிவகை செய்யும் மசோதா தாக்கல் செய்துள்ளது.

இந்த Inter Services Organisations (Command, Control & Discipline) Bill 2023 அதாவது ” கூட்டு படை அமைப்புகள் (கட்டளை, கட்டுபாட்டு மற்றும் ஒழுங்குமுறை) மசோதா 2023 என்பது தான் அதன் பெயராகும், இதனை மக்களவையில் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா தற்போது உள்ள கூட்டு படைகள் அமைப்புகள் மற்றும் இனி உருவாக்கப்பட உள்ள அமைப்புகளின் கட்டளை அதிகாரிகளுக்கு நிர்வாகம், கட்டுபாடு, ஒழுங்குமுறை தொடர்பான தேவையான அனைத்து அதிகாரங்களையும் வழங்கும், இதன் காரணமாக தனக்கு கீழ் உள்ள அனைத்து முப்படை வீரர்களையும் அவரால் திறம்பட கையாள முடியும்.

தற்போது தரைப்படை சட்டம் 1950, விமானப்படை சட்டம் 1950 மற்றும் கடற்படை சட்டம் 1957 ஆகியவற்றை கொண்டு தான் முப்படைகளும் தன்னந்தனியாக நிர்வகிக்கப்படுகின்றன, ஆனால் இந்த புதிய சட்டம் காரணமாக ஒருங்கிணைந்த கட்டளையகத்தை ஏதேனும் படையை சேர்ந்த ஒர் மூன்று நட்சத்திர அந்தஸ்து அதிகாரி வழிநடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது Defence Cyber Agency, Defence Space Agency, Defence Intelligence Agency மற்றும் Armed Forces Special Operations Division ஆகிய ஒருங்கிணைந்த ராணுவ அமைப்புகள் உள்ளன, இது தவிர அந்தமான் நிகோபார் முப்படை கட்டளையகம், அணு ஆயுதங்களை கையாளும் Strategic Forces Command ஆகிய இரண்டு ஒருங்கிணைந்த கட்டளையகங்கள் உள்ளன.

அதே நேரத்தில் இந்திய விமானப்படையில் 7 வெவ்வேறு கட்டளையகங்கள், இந்திய தரைப்படையில் 7 வெவ்வேறு கட்டளையகங்கள் மற்றும் இந்திய கடற்படையில் 3 வெவ்வேறு கட்டளையகங்கள் உள்ளன இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து இனி தனித்தனி கட்டளையகங்களை இல்லாமல் செய்து விட்டு ஒருங்கிணைந்த கட்டளையகங்களை உருவாக்கும் பணியில் இந்த மசோதா முக்கிய பங்காற்றும் என்றால் மிகையாகாது.