
10 நாட்களுக்கும் மேலாக செயல்பாடு நிறுத்தப்பட்டு தரையிறக்கப்பட்ட பின்னர், இந்திய இராணுவத்தின் சில ALH துருவ் ஹெலிகாப்டர்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன என்று இந்திய இராணுவ அதிகாரிகள் செவ்வாயன்று தெரிவித்தனர்.
HAL அதிகாரிகள் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுக்களால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு மீதமுள்ள வானூர்திகளும் நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்படும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மாத தொடக்கத்தில், மும்பை கடற்கரையில் ஒரு வழக்கமான பயணத்தில் இந்திய கடற்படை மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH), தொழில்நுட்ப கோளாரால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்திய கடற்படையின் கூற்றுப்படி, பைலட் அவசரமாக வானூர்தியை கடலில் தரையிறக்கினார். ஹெலிகாப்டரில் இருந்த மூன்று வீரர்களும் உடனடியாக கடற்படை ரோந்து கப்பல் மூலம் மீட்கப்பட்டனர் என கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து, சம்பவத்திற்கான காரணத்தை புலனாய்வாளர்கள் கண்டறிந்து முன்னெச்சரிக்கை சோதனைகள் மேற்கொள்ளப்படும் வரை ALH Dhruv ஹெலிகாப்டர்களின் செயல்பாடுகளை பாதுகாப்புப் படைகள் நிறுத்தி வைத்துள்ளன.
ALH ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர காவல்படையுடன் இணைந்து ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உள்ளிட்ட மூன்று பாதுகாப்புப் படைகளாலும் இயக்கப்படுகின்றன.