மேஜர் பிரஃபுல் மொஹர்கரின் மரணத்திற்காக இந்தியா பழிவாங்கிய கதை !!

  • Tamil Defense
  • March 28, 2023
  • Comments Off on மேஜர் பிரஃபுல் மொஹர்கரின் மரணத்திற்காக இந்தியா பழிவாங்கிய கதை !!

மேஜர் பிரஃபுல் மொஹர்கர் மஹாராஷ்டிரா மாநிலம் ஜூனோனா கிராமத்தில் திரு. அம்பாதாஸ் மொஹர்கர் மற்றும் திருமதி. சுதா மொஹர்கர் ஆகியோருக்கு மகனாக பிறந்தார், இவர் தனது பள்ளி கல்வியை முடித்துவிட்டு நாக்பூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்.

ஆனால் சிறுவயது முதலே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர் ஆகையால் TES – Technical Entry Scheme மூலமாக தனது 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து பிஹார் மாநிலம் கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில் OTA officers Training Academy இணைந்தார்.

அங்கிருந்து பின்னர் பூனேவில் உள்ள CME – College of Military Engineering எனப்படும் ராணுவ பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு 2007ஆம் ஆண்டு சீக்கிய ரெஜிமென்ட்டில் லெஃப்டினன்ட் அந்தஸ்து அதிகாரியாக இணைந்தார்.

2013ஆம் ஆண்டு மேஜர் பிரஃபுல் மொஹர்கர் திருமதி. அபோலி அவர்களை திருமணம் செய்து கொண்டார் அப்போது அவர் ஜம்மு காஷ்மீரில் சம்பா செக்டாரில் பணியாற்றி வந்தார் அங்கு அவரது பணிக்காலம் முடிந்த பிறகு அமைதி நிலவும் பகுதிக்கு பணிக்கு சென்றிருக்கலாம் ஆனால் மீண்டும் காஷ்மீரிலேயே பணி செய்ய விருப்பம் தெரிவித்தார்.

இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் உடனான எல்லை கட்டுபாட்டு கோடருகே உள்ள கேரி செக்டாருக்கு பொறுப்பான வீர் பத்ரேஷ்வர் காவல் சாவடியின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார், இது மிக மிக பதட்டமான பகுதியாகும் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடைபெறும்.

அத்தகைய இந்த பகுதியை இந்திய தரைப்படை வீரர்கள் ரோந்து சென்று கண்காணிப்பது வழக்கம், அந்த வகையில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி மேஜர். பிரஃபுல் தலைமையிலான ரோந்து குழு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது காவல் சாவடி மீது பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தின.

பகல் 12:15 மணியளவில் பிராட் கல்லா பகுதியில் மேஜர். பிரஃபுல் தலைமையிலான ரோந்து குழு வந்த போது அங்கு பதுங்கி இருந்த பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கி மற்றும் பிரங்கி தாக்குதலில் மேஜர். பிரஃபுல் மொஹர்கர், லான்ஸ் நாயக் குர்மைல் சிங், லான்ஸ் நாயக் குல்தீப் சிங் மற்றும் மற்றும் சிப்பாய் பர்கத் சிங் ஆகியோர் படுகாயமடைந்து சற்று நேரத்தில் வீரமரணம் அடைந்தனர்.

அடுத்த நாள் தனது நான்காவது திருமண நாளை கொண்டாட இருந்த மேஜர் பிரஃபுல் மொஹர்கரும் அவரது மூன்று வீரர்களும் இந்த திட்டமிட்ட தாக்குதலில் கொல்லபட்டதையடுத்து பிரிகேடியர் அந்தஸ்திலான அதிகாரி ஒரு பழிவாங்கும் ஆபரேஷனை நடத்த உத்தரவிட்டார்.

2017ஆம் ஆண்டின் இறுதி நாட்களில் பாகிஸ்தான் படையினர் அவர்களது காவல்சாவடியை விட்டு ரோந்துக்காக சென்ற போது ஒரு வெடிகுண்டு தாக்குதலில் சிலர் கொல்லப்பட்டனர், மீதமிருந்த பாக் படையினரை பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஏற்கனவே 300 மீட்டர் தெலைவிற்கு ஊடுருவி இருந்த இந்திய கடக் கமாண்டோ படையினர் சுற்றி வளைத்தனர்.

அவர்கள் நடத்திய தாக்குதலில் அனைத்து பாகிஸ்தான் படையினரும் சில நிமிடங்களிலேயே கொல்லப்பட்டனர், இந்திய படையினரும் எவ்வித காயமும் இன்றி இந்திய பகுதிக்கு திரும்பினர், வெளி உலகிற்கு தெரியாத பல ராணுவ நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.