இந்திய விமானப்படை மற்றும் இந்திய தரைப்படை அதிகாரிகள் மீது கோர்ட் மார்ஷியல் நடவடிக்கை !!

  • Tamil Defense
  • February 25, 2023
  • Comments Off on இந்திய விமானப்படை மற்றும் இந்திய தரைப்படை அதிகாரிகள் மீது கோர்ட் மார்ஷியல் நடவடிக்கை !!

உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில எல்லையில் அமைந்துள்ளது இந்திய விமானப்படையின் சரஸ்வா படைத்தளம் இங்கிருந்து தான் 152ஆவது ஹெலிகாப்டர் படையணி இயங்கி வருகிறது இந்த படையணி ரஷ்ய Mi- 17 V5 ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகிறது.

இந்த படையணியை சேர்ந்த JWO Junior Warrant Officer எனப்படும் இடைநிலை அதிகாரி அந்தஸ்திலான ஒரு விமானப்படை ஜவான் ஒரு மி-17 வி5 ஹெலிகாப்டரின் Auto Pilot Junction Box வயர்களை வெட்டி துண்டித்துள்ளார், இதன் காரணமாக இவர் மீது கோர்ட் மார்ஷியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர் வேண்டுமென்றே நேரடி உத்தரவை மீறி ஹெலிகாப்டருக்கு சேதம் விளைவிக்கும் எண்ணத்திலேயே இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளார் எனவும் இதற்காக இவர் மீது ஐந்து விமானப்படை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படையின் 30ஆவது பிரிவு கட்டளை அதிகாரி தலைமையில் நடைபெற்ற Court Of Inquiry விசாரணையில் அந்த விமானப்படை இடைநிலை அதிகாரி தனது குற்றத்தை ஒப்பு கொண்டு உள்ளதாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் இந்திய தரைப்படை நடத்திய விசாரணை ஒன்றில் இந்திய தரைப்படையின் மேஜர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவருக்கு கோர்ட் மார்ஷியல் நடவடிக்கை மூலமாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் பணியாற்றும் போது அவர் தனது சக அதிகாரியின் Tab ஒன்றை திருடி ஒரு கடையில் விற்ற குற்றத்திற்காக மேற்குறிப்பிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த அதிகாரி தான் குற்றம் செய்யவில்லை என தெரிவித்தாலும் ஆதாரங்கள் அவருக்கு எதிராக இருந்த காரணத்தால் அவரை தரைப்படை நீதிமன்றம் பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்திய தரைப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.