எகிப்து அதிபர் அல் சிசி சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வந்த நிகழ்வு இந்திய எகிப்திய இருதரப்பு உறவுகளில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது, இருநாட்டு உறவுகளும் இனி புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா G20 உச்சி மாநாட்டை நடத்த உள்ள நிலையில் உலகின் தென்பகுதி நாடுகளுக்கான ஆதரவை அந்த பகுதியை சேர்ந்த வலிமையான நாடு எனும் முறையில் திரட்டி வருகிறது எகிப்தின் ஆதரவையும் அந்த வகையில் இந்தியா கோரி உள்ளது.
மேலும் G20 மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராகவும் எகிப்து அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அரேபிய, வடக்கு ஆஃப்ரிக்க இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான அரபு லீக் தலைமையகமும் அல் – அஸார் இஸ்லாமிய மதகுருக்களுக்கான கல்வி மையமும் எகிப்தில் அமைந்துள்ளதால் எகிப்தின் செல்வாக்கு மிக மிக முக்கியமானதாகும்.
அதே போல் இருதரப்பு ராணுவ மற்றும் வர்த்தக உறவுகளுக்கும் புத்துயிர் உட்ட திட்டமிடப்பட்டு உள்ளது, தற்போது 7 பில்லியன் டாலராக இருக்கும் இருதரப்பு வர்த்தகம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 12 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் எகிப்து அதிபர் அல் சிசியிடம் இந்திய தரப்பு ஏற்றுமதிக்கான ஆயுத பட்டியலை அளித்துள்ளது, அதில் தேவையானதை தேர்வு செய்து கோரிக்கை வைத்தால் விற்பனை செய்யவும் பல்வேறு சலுகைகள் வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா எகிப்து விமானப்படைக்கு இலகுரக தேஜாஸ் போர் விமானங்களை விற்பனை செய்ய தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில் இந்தியாவின் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மீது எகிப்து ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.