பயங்கரமாக பாதிக்கப்பட்ட துருக்கி- உதவிக்கரம் நீட்டிய இந்தியா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டிற்கு நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து, இந்தியாவுக்கான துருக்கியின் தூதர் ஃபிரத் சுனெல், புது தில்லியை ‘தோஸ்த்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாயன்று, இந்தியா தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) மீட்புக் குழுவுடன் மனிதாபிமான உதவியின் முதல் தொகுதியை துருக்கிக்கு அனுப்பியது.

இதுகுறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “இந்தியாவின் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (எச்ஏடிஆர்) தற்போது செயல்படுத்தப்பட்டு உள்ளது ” என தெரிவித்துள்ளார்.

துணை கமாண்டன்ட் தீபக் தல்வார் தலைமையிலான 51 பேர் கொண்ட என்.டி.ஆர்.எஃப் குழு காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை (IAF) விமானத்தில் துருக்கிக்கு புறப்பட்டது.

திங்களன்று, சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படைகள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் 100 பணியாளர்களைக் கொண்ட இரண்டு NDRF குழுக்கள் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக துருக்கிக்கு பறக்கத் தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.