புதன்கிழமை அன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் இந்திய சீன எல்லையை பாதுகாக்கும் இந்தோ திபெத் எல்லை காவல் படையின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு புதிய செக்டார் தலைமையகம், 7 பட்டாலியன்கள் (9400 வீரர்கள்) என எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது, இதன் மூலம் 47 எல்லை காவல் சாவடிகள் மற்றும் 12 முகாம்களை வீரர்களை நிலைநிறுத்த முடியும் என கூறப்படுகிறது.
வருகிற 2025-2026 ஆண்டு வாக்கில் இந்த பணிகள் நிறைவு பெறும் எனவும் இந்தியா சீனா இடையே எல்லையோரம் மோதல் நடைபெற்று வரும் நிலையில் இந்த முடிவு மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதையெட்டி வீரர்களுக்கான தங்குமிடம், ஆயுதங்கள், கட்டுமானங்களுக்கான நில கொள்முதல் ஆகியவற்றிற்கு சுமார் 1800 கோடி ரூபாய் மற்றும் வீரர்களின் ஊதியம் மற்றும் உணவு ஆகியவற்றிற்கான செலவாக ஆண்டிற்கு 963 கோடி ரூபாய் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
90,000 வீரர்களை கொண்ட இந்தோ திபெத் எல்லை காவல்படையானது 1962 இந்திய சீன போருக்கு பிறகு உருவாக்கப்பட்டது அன்று முதல் இன்று வரை திறம்பட இந்த படை ஆஃப்கன் தூதரக பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது, கல்வான் மற்றும் அதை தொடர்ந்த மோதல்களிலும் சீன ராணுவத்தை எதிர்த்து இந்திய ராணுவத்துடன் இணைந்து சண்டையிட்டது கூடுதல் சிறப்பு ஆகும்.