யாரை மிரட்ட பயிற்சி ? அமெரிக்கா நடத்திய பிரமாண்ட ராணுவ பயிற்சி !!

  • Tamil Defense
  • January 30, 2023
  • Comments Off on யாரை மிரட்ட பயிற்சி ? அமெரிக்கா நடத்திய பிரமாண்ட ராணுவ பயிற்சி !!

கடந்த 13ஆம் தேதி முதல் 27 வரை மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (CENTCOM) மற்றும் இஸ்ரேலிய ராணுவம் ஆகியவை இணைந்து பிரமாண்ட ராணுவ கூட்டு பயிற்சிகளை நடத்தியுள்ளன.

Juniper Oak – 2023 ஜூனிபர் ஓக் என பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சியில் 12 கடற்படை கப்பல்கள், 142 விமானங்கள், பிரங்கிகள் போன்ற பல்வேறு ராணுவ தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த 142 விமானங்களில் 100 விமானங்கள் அமெரிக்க விமானப்படையின் F – 35, B – 52 தொலைதூர குண்டுவீச்சு போர் விமானங்கள், F/A – 18, MQ – 9 Reaper ட்ரோன்கள், F – 15, F – 16, Apache ஹெலிகாப்டர்கள், AC – 130 கனரக தரை தாக்குதல் விமானங்கள் போன்றவையாகும்.

இந்த கூட்டு பயிற்சி இஸ்ரேல் அமெரிக்க ராணுவ கூட்டு பயிற்சி வரலாற்றிலேயே மிகப்பெரியதாகும், இதில் சுமார் 81,000 கிலோ வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன, மேலும் வான் கடல், கடலடி மற்றும் தரை என அனைத்து வகையான நிலைகளிலும் பயிற்சிகள் நடைபெற்றுள்ளன.

இஸ்ரேல் கடற்படையின் Saar 5 கார்வெட் மற்றும் ஒரு நீர்மூழ்கி உட்பட ஆறு கப்பல்களும் அமெரிக்க கடற்படையின் ஒரு விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் படையணியை சேர்ந்த ஆறு கப்பல்களும் பங்கேற்றுள்ளன.

அமெரிக்க ராணுவ தரப்பில் இருந்து 6500 வீரர்கள் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தில் இருந்து 1000 வீரர்கள், மற்றும் இரு ராணுவங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோர் கண்காணிப்பில் வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.