ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்திய நீர்மூழ்கி கப்பல் !!

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS SINDHURATNA சிந்துரத்னா எனப்படும் கிலோ ரக டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல் ரஷ்யாவுக்கு பராமரிப்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது பணிகள் முடிந்தும் நாடு திரும்ப முடியாமல் அங்கு சிக்கியுள்ளது.

இதற்கு காரணம் ரஷ்யா உக்ரைன் போராகும், ரஷ்யா மீதான தடைகளால் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை சுமந்து வரும் சுமைதாங்கி கப்பல் நிறுவனங்கள் ரஷ்யா சென்று நமது நீர்மூழ்கி கப்பலை இந்தியா கொண்டு வர மறுத்து வருகின்றன.

ஆகவே ரஷ்யாவின் ஸெவெரோட்வின்ஸ்க் நகருக்கு இந்தியா நீர்மூழ்கி கப்பல் வீரர்களை அனுப்பி கப்பலை நார்வே நாட்டிற்கு இயக்கி சென்று பின்னர் அங்கிருந்து சுமைதாங்கி கப்பலில் ஏற்றி இந்தியாவின் மும்பை நகரில் உள்ள கடற்படை தளத்திற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.

நார்வேயில் இருந்து இந்தியா வந்து சேர 35 நாட்கள் ஆகும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன அதே போல இந்தியா தனது நீர்மூழ்கி பலம் குன்றாமல் இருக்க 4 கிலோ ரக நீர்மூழ்கி கப்பல்களை மேம்படுத்த உள்ளது இதற்கு ஒவ்வொரு கப்பலுக்கும் தலா 1400 கோடி ரூபாய் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.