இந்திய கடற்படை உக்ரைனில் இருந்து அதிகளவில் கடல்சார் என்ஜின்களை வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது அத்தகைய கொள்முதல்களை இனி நிறுத்தி கொள்ள திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் அவற்றிற்கு பதிலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கடல்சார் என்ஜின்களை வாங்கி தனது அடுத்த தலைமுறை நடுத்தர போர் கப்பல்களில் பயன்படுத்தி கொள்ளவும் பெரிய கப்பல்களில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் என்ஜின்களை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இந்திய கடற்படை நாட்டின் தொழில்துறையை தொடர்பு கொண்டு உள்ளதாகவும் பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி உள்ளதாகவும் மேலும் DRDO தனது காவேரி கடல்சார் என்ஜின் திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்து உள்ளதாகவும் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா சொந்தமாக அனைத்து வகை கடல்சார் என்ஜின்களை தயாரிக்கும் திறனை பெற்றுவிடும் எனவும் தொழில்துறையினர் கூறுகின்றனர்.
ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உக்ரைனில் இருந்து கடல்சார் என்ஜின்களை வாங்கி வந்த நிலையில் ரஷ்யா மாற்று வழியை தேடி வருகிறது, இந்தியா உள்நாட்டில் மாற்று ஏற்பாடுகளை தேடி வருகிறது என்பதும் இந்திய கடற்படையில் தற்போது பல வகையான 150 கப்பல்களில் உக்ரைனிய என்ஜின்கள் உள்ளதும் கூடுதல் தகவல் ஆகும்.