சூப்பர் கல்வரி திட்டத்தை உயிர்ப்பிக்க திட்டமிடும் இந்தியா !!

இந்திய கடற்படைக்கு ஆறு அதிநவீன டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவதற்கான P- 75I (Project 75 India) திட்டம் தொடர்ந்து காலதாமதம் ஆகி வருவதை அனைவரும் அறிவோம்.

பல நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பங்கெடுக்க விருப்பமின்றி பின்வாங்கி வரும் நிலையில் இந்திய கடற்படை இந்த திட்டத்திற்கான காலக்கெடுவை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது ஆன போதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ஒருவேளை இந்திய கடற்படை மேலும் அதிகமாக கல்வரி (ஃபிரான்ஸில் ஸ்கார்பீன்) ரக டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை வாங்க திட்டமிடலாம் என கூறப்படுகிறது இந்த நிலையில் ஃபிரான்ஸ் இத்தகைய மூன்று கப்பல்களை விற்க ஏற்கனவே அளித்த ஆஃபரை இந்தியா ஏற்று கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இரண்டாவது திட்டம் சூப்பர் கல்வரி திட்டத்தை உயிர்ப்பிப்பதாகும், இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது தற்போதைய கல்வரி ரக நீர்மூழ்கி கப்பல்களின் எடை இரட்டிப்பாகும் மேலும் நீளமும் அதிகமாகும் என கூறப்படுகிறது.

இரண்டு புதிய பகுதிகள் சேர்க்கப்படும் ஒன்று AIP – Air Independent Propulsion அமைப்புக்கானது மற்றொன்று ஏவுகணைகளை செங்குத்தாக ஏவும் VLS Vertical Launching System அமைப்புக்கானதாகும், அந்த வகையில் எடை 3000 டன்களாகவும் நீளம் 100 மீட்டருக்கு அதிகமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

P -75 India திட்டம் ரத்து செய்யப்பட்டால் இந்திய கடற்படை உடனடியாக சூப்பர் கல்வரி திட்டத்தை செயல்படுத்தி இத்தகைய ஆறு நீர்மூழ்கி கப்பல்களுக்கான ஆர்டரை கொடுக்கும் மேலும் இதன் மூலம் 12 அடுத்த தலைமுறை டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே கட்டமைப்பதற்கான அனுபவத்தையும் பெற முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.