சீனாவை மனதில் வைத்து அணு ஆயுதங்களை மேம்படுத்தும் இந்தியா !!

  • Tamil Defense
  • January 31, 2023
  • Comments Off on சீனாவை மனதில் வைத்து அணு ஆயுதங்களை மேம்படுத்தும் இந்தியா !!

கடந்த ஆண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் சம்மேளனம் Federation of American Scientists எனப்படும் அமெரிக்க அமைப்பு நடத்திய ஆய்வின் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது அதில் இந்திய அணு ஆயுத கொள்கை பாகிஸ்தானை விட்டு சீனாவை மையமாக வைத்து வகுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் அதில் இந்திய அணு ஆயுதங்கள் மற்றும் அவற்றை ஏவும் தளவாடங்கள் ஆகியவை நவீனபடுத்தப்பட்டு வருவதாகவும், பழைய தளவாடங்களின் வரிசையில் புதிதாக நான்கு தளவாடங்கள் சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா இரண்டு வகையான விமானங்கள், நான்கு தரையில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் இரண்டு கடல்சார் ஏவுகணைகள் என மொத்தத்தில் எட்டு வெவ்வேறு ஏவு தளவாடங்களை பயன்படுத்தி வருகிறது.

இவற்றின் வரிசையில் மேலும் நான்கு அதிநவீன ஏவு தளவாடங்கள் விரைவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது, இவை தான் இந்தியாவின் Nuclear Triad எனப்படும் முப்பரிமாண அணு ஆயுத தாக்குதல் திறனின் தூண்கள் என்றால் மிகையாகாது.

அதேபோல இந்தியாவிடம் சுமார் 138 முதல் 213 அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான 700 (150 கிலோ கூடுதல் அல்லது குறைவு – Plus or Minus) கிலோகிராம் அளவிலான ஆயுத தர புளூட்டோனியம் கையிருப்பு உள்ளதாகவும் ஆனால் இவை பெரும்பாலும் பயன்பாட்டு நிலையை எட்டாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜனவரி 2021ல் 156ஆக இருந்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கை ஜனவரி 2022ல் 160ஆக அதிகரித்துள்ளது, இந்தியா மிகவும் மெதுவாக தனது அணு ஆயுத எண்ணிக்கையை அதிகரித்து வருவதாக பார்க்கப்படுகிறது.

மஹாரஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள BARC – Bhabha Atomic Research Centre மையம் தான் இந்தியாவின் பிரதான அணு ஆயுத தர புளூட்டோனியம் சப்ளையராகும், இந்தியா இங்கு மேலும் ஒரு அணு உலையை நிறுவி மேற்குறிப்பிட்ட தரத்திலான புளூட்டோனிய தயாரிப்பை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.

இது தவிர இந்தியா அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பிலும் முழு வீச்சுடன் ஈடுபட்டு வருகிறது, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள INS VARSHA வர்ஷா கடற்படை தளம் தான் இந்திய கடற்படையின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களின் இருப்பிடமாகும்.

இங்கு மலையை குடைந்து சுமார் ஏழு சுரங்கங்கள், நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்தம் வசதிகள் மற்றும் இதர உதவி அமைப்புகள் போன்றவை கட்டமைக்கப்பட்டு உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.

இவை அனைத்தையுமே இந்தியா தற்போது சீனாவை மனதில் வைத்து கொள்கை சார் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதன் அடையாளம் ஆகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .