பிரதமரை காப்பாற்றிய ராணுவ அதிகாரிக்கு வீர தீர விருது !!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி பிரதமர் மோடி ஜம்மு நகருக்கு பயணம் மேற்கொண்டார் அப்போது அவர் பங்கேற்க இருந்து கூட்டத்தில் வைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிய வந்தன.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டு கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது, இதன் ஒரு பகுதியாக இந்திய தரைப்படையின் மிகச்சிறந்த படையணியான 9ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியனும் களமிறங்கியது.

இந்த பட்டாலியனை சேர்ந்த இளம் அதிகாரியான கேப்டன். ராகேஷ் ஏதேனும் தாக்குதல் நடந்தால் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தும் சிறு குழுவுக்கு தலைமை தாங்கி களத்தில் இருந்தார்.

அப்போது பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தையடுத்து கேப்டன் ராகேஷ் தலைமையிலான குழுவினர் உடனடியாக செயலில் இறங்கினர், குறிப்பிட்ட பகுதியை சுற்றி வளைத்தனர்.

மேலும் ஒரு ட்ரோனை பயன்படுத்தி பயங்கரவாதிகள் இருந்த இடத்தை கேப்டன் ராகேஷ் கண்டுபிடித்தார், பின்னர் அவர்களை எங்கும் தப்பிக்க முடியாது வகையில் தனது வீரர்களை கொண்டு ஒடுக்கி சுற்றி வளைத்தார்.

இதை உணர்ந்த பயங்கரவாதிகள் எப்படியாவது தப்பி செல்லும் நோக்கில் மிகவும் கடுமையாக துப்பாக்கி சண்டையிட்டனர், இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வீரர்களின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்தை கேப்டன் ராகேஷ் உணர்ந்தார்.

ஆகவே தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பயங்கரவாதிகள் மீது மிகவும் கடுமையான பதில் தாக்குதலை நடத்தினார், இந்த சரமாரியான தாக்குதலை சமாளிக்க முடியாமல் பயங்கரவாதிகள் அடங்கினர், மேலும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான்.

இவரது இந்த வீர தீர செயலை பாராட்டி குடியரசு தினத்தன்று அமைதி காலத்தில் வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான ஷவுர்ய சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.