
இந்தியாவின் முதலாவது அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலான INS ARIHANT அரிஹந்த் தற்போது தனது முதல் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புதல் பணியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை வெளிப்படுத்தும் வகையில் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன, அதில் விசாகப்பட்டினம் கப்பல் கட்டுமான தளத்தில் உள்ள பராமரிப்பு தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது, இந்த பணிகள் முடிவடைய 18 – 24 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலில் உள்ள அணு உலையானது 83 மெகாவாட் திறன் உற்பத்தி செய்ய கூடியதாகும், முழு திறனுடன் இது இயங்கினால் 6-7 ஆண்டுகளில் எரிபொருள் நிரப்ப வேண்டும், 65% திறனுடன் இயங்கினால் 7-10 ஆண்டுகளில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
2013ஆம் ஆண்டு அரிஹந்த் கப்பலின் அணு உலை செயல்பாட்டுக்கு வந்த நிலையில் சுமார் 9 ஆண்டுகள் கழித்து தற்போது எரிபொருள் நிரப்பும் பணிகள் நடைபெறுகின்றன, ஆகவே முழு செயல்திறனில் அணு உலை இயக்கப்படவில்லை என்தை அறிந்து கொள்ளலாம் அதே நேரத்தில் இனி கட்டப்பட S5 ரக கப்பலின் அணு உலைக்கு 10-12 ஆண்டுகளுக்கு ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் போதுமானது என்பது கூடுதல் தகவல் ஆகும்.